×

ஷிவமொக்கா கலவரத்திற்கு பாஜ தான் காரணம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி விமர்சனம்

பெங்களூரு: வகுப்புவாத வன்முறையை தூண்டும் வகையில் பாஜவினர் செயல்படுவதாகவும், ஷிவமொக்கா கலவரத்திற்கு பாஜ தான் காரணம் என்றும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி விமர்சித்துள்ளார். ஷிவமொக்கா நகரில் கடந்த 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாந்திநகர், ராகிகுட்டா, காந்திபஜார், அமீர் அகமது சாலை உட்பட பல இடங்களில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்பட்டது. ராகிகுட்டா பகுதியில் வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் பேனரில் சர்ச்சைக்குரிய வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், பதற்றத்தை தணிக்கும் வகையில் அந்த சர்ச்சைக்குரிய வாசகம் அழிக்கப்பட்டது. ஆனாலும் அன்றைய தினம் மாலை மிலாடி நபி ஊர்வலம் நடந்தபோது, சிலர் வீடுகள், வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார், 60 பேரை கைது செய்தனர். அப்பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், ஷிவமொக்கா கலவரம் குறித்து பேசிய மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ’பாஜ ஆட்சியில் இல்லாதபோது, வகுப்புவாத வன்முறையை தூண்டுவது, சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தவறான பிரசாரங்களை மேற்கொள்வது என பலவிதமான தொந்தரவுகளை அளிக்கும். ஆரம்பத்திலிருந்தே இதுதான் பாஜவின் பழக்கம். பாஜ ஆட்சியிலிருந்தால் தார்மீக கொள்கை பற்றியெல்லாம் பேசுவார்கள். ஆனால் வகுப்புவாத வன்முறைகளை தூண்டிவிடுவது அவர்கள் தான். பாஜவினர் அவர்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுவேடத்தில், போலியான பெயரில் இதுமாதிரியான சம்பவங்களில் ஈடுபடுவார்கள். பிறப்பால் அவர்களது இயல்பு அதுதான். அவர்களது ரத்தத்திலேயே இது கலந்தது’ என்று ராமலிங்க ரெட்டி மிகக்கடுமையாக விமர்சித்தார்.

The post ஷிவமொக்கா கலவரத்திற்கு பாஜ தான் காரணம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Shivamogga riots ,Minister ,Ramalinga Reddy ,Bengaluru ,Ramalinga ,Shivamocha ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...