×

விபத்தில் சிக்கும் வாகனங்கள்மார்த்தாண்டம் மேம்பாலத்தில் உருவான மரண பள்ளம்: சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுமா?

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் பிரதான வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக பம்மம் பகுதியில் இருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலம் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை கட்டி முடித்து 5 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், அதனை கட்டிய நிறுவனம் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் கடும் வெயில், மழை மற்றும் கனரக வாகன போக்குவரத்து காரணமாக மேம்பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

மேம்பாலத்தின் சுவர்களில் விரிசல், மழைநீரோடை அடைப்பு, மழைநீர் செல்லும் குழாய் உடைந்து மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் கீழே அருவிபோல் விழுவது என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
நேற்று பெய்த பலத்த மழையால் பாலத்தில் ஆறுபோல் தண்ணீர் ஓடியது. மேலும் மேம்பால சாலையில் பல பகுதிகளில் அபாயகரமான பள்ளங்கள் உருவாகியுள்ளது. கனமழையால், அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் பள்ளம் இருப்பதை கவனிக்காமல் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. அந்த வகையில் இன்று காலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. அந்த கார் பலத்த சேதமடைந்துவிட்ட நிலையில் டயரும் பஞ்சரானது.
இதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. அதேபோல் மேம்பாலத்தின் அணுகு சாலையும், பாலத்தின் கீழே உள்ள சாலையும் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

கேரளா- தமிழகம் இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த மேம்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post விபத்தில் சிக்கும் வாகனங்கள்மார்த்தாண்டம் மேம்பாலத்தில் உருவான மரண பள்ளம்: சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Bammam ,Kumari district ,Martandam ,
× RELATED தக்கலை பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் கேரள அரசு பேருந்துகள்