×

இயேசுவுக்கு நடந்த மனித உரிமை மீறல்

கிறிஸ்துவம் காட்டும் பாதை

அக்காலத்தில் நாம் இன்று பேசும் மனித உரிமைச் சட்டங்கள் இல்லை. அதே சமயம் மக்களை சமயச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களே வழி நடத்தின, அவர்கள் மீது ஆட்சி புரிந்தன. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் யூதசமயச் சட்டங்களாலும் ரோம அரசின் சட்டங்களாலும் வழிநடத்தப்பட்டனர், நசுக்கப்பட்டனர். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இயேசுவின் காலத்தில் இரு நேர் எதிர் சக்திகளான யூத சமயத் தலைவர்களும் ரோம அதிகாரமும் புனிதமற்ற கூட்டணி அமைத்துக் கொண்டு பொதுமக்களைச் சுரண்டியும் ஒடுக்கியும் வந்தனர்.

இயேசுகிறிஸ்து முழுக் கடவுள் நம்பிக்கையுடன் இயங்கினார். அதன் காரணமாகவே இவ்வதிகாரங்களால் வீழ்த்தப்பட்டு அவதியுற்ற சாதாரண மக்களின் சார்பில் நின்று சமய அதிகாரங்களையும் அரசியல் அதிகாரங்களையும் விமர்சித்தார். இவ்வாறு விமர்சிக்கவும் தவறான சட்டங்களை மீறவும் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்த நாடு கடவுள் ஆட்சிக்குள் இருந்தால் ஏழைகளும், பெண்களும், ஒடுக்கப்பட்டோரும், பிணியாளிகளும் எவ்விதம் நடத்தப்படுவர் என்பதை தமது பேச்சு, கற்பித்தல் மற்றும் குணமாக்கும் செயல்கள் வழியாக எடுத்துக்கூறியும் செயல்படுத்தியும் வந்தார். இதன் காரணமாக சமய மற்றும் அரசியல் அதிகாரங்களின் வெறுப்புக்கு ஆளானார்.

சரியான சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த சமயத் தலைவர்கள் பாஸ்கா பண்டிகையின்போது அவரைக் கைது செய்தனர். (மாற்கு 14:43-46) இயேசுவை கைது செய்து இரவோடு இரவாக விசாரணை நடத்தி அரசியல் குற்றத்திற்கான மரண தண்டனை விதித்து மறுநாள் மாலையே அதை அவசர அவசரமாக நிறைவேற்றினர். இயேசுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மீறப்பட்டுள்ள மனித உரிமைகள் யாவை?

1) அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஏதும் நிருபிக்கப்படவில்லை. (மாற்கு 14: 55-59)

2) தண்டனை வழங்கும் அதிகாரியான ரோம ஆளுநர் பிலாத்து இயேசுவின் மீது எந்தக் குற்றமும் காணவில்லை என்று உறுதி செய்தான். (லூக்கா 23:13-16)

3) சமயத் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களின் கூட்டத்தைக் கொண்டு அரங்கத்தை நிரப்பி கூச்சல் எழுப்பி பிலாத்துவைப் பணியச்செய்தனர். (லூக்கா 23:18-25)

4) விசாரணையின் போது காயப்படும் அளவுக்குச் சித்ரவதை செய்யப்பட்டார். (மாற்கு 14:65)

5) முள்முடி சூட்டப்பட்டு வதைக்கப்பட்டார். (மத்தேயு 27:29)

6) ஆடைகள் அகற்றி நிர்வாணப் படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் (மாற்கு 15:16-20) (யோவான் 19:23)

7) விசாரணையின்போது உணவும் தண்ணீரும் வழங்கப்படவில்லை. (யோவான் 19:28)

8) சுமக்க இயலாத சுமையை அவர் மீது சுமத்தினார்கள். (லூக்கா 23:26)

இயேசு கடவுளின் மைந்தர். இந்த அதிகாரங்கள் எதற்கும் அடங்க மறுத்தார். அவர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை, உயிர்ப்பிச்சை கேட்கவில்லை. மரண தண்டனைக்கும் அஞ்சவில்லை. அவர் அச்சப்பட்டதெல்லாம் நமக்குப் பின் நம்மைப் பின் தொடர்ந்த பாமரர்களை இந்த அதிகாரவர்க்கம் என்ன செய்யும் என்பதுதான். ஆனால் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவர்களைத் துணிவடையச் செய்தது. அவர்களும் அதிகாரங்களுக்கு அடங்க மறுத்தனர். இயேசுவே இரட்சகர் என்று நாடு முழுக்கவும், நாடு கடந்தும் முழக்கமிட்டனர். இயேசுகிறிஸ்துவின் கொள்கைகளைப் பரப்பினர். (திருத்தூதுவர் பணிகள் 4:12, 19-22).

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post இயேசுவுக்கு நடந்த மனித உரிமை மீறல் appeared first on Dinakaran.

Tags : Jesus ,Christ ,Dinakaraan ,
× RELATED தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்...