×

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை குஜராத் மருத்துவர்கள் ஆய்வு

சென்னை: குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 60 மருத்துவர்கள் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதி தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ரோபோடிக் அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை உள்ளிட்டவை தமிழகத்தில்தான் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

அண்டை மாநிலம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து இலவச சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வருகின்றனர். சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் அரசு சார்பில் மருத்துவத் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் மருத்துவ பயிற்சிக்காக மற்ற மாநிலத்தில் மாணவர்கள் வந்து பயின்று பயிற்சியை நிறைவு செய்கின்றனர். அதுமட்டுமின்றி மற்ற மாநில சுகாதார அமைச்சர்கள் அவ்வப்போது தமிழக மருத்துவக்கட்டமைப்பை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று குஜராத் மாநிலத்தில் இருந்து 60 மருத்துவர்கள் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக குஜராத் மாநிலத்தில் இருந்து 60 மருத்துவர்கள் வந்தனர். அவர்கள் குறிப்பாக, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் மையம், முழு உடல் பரிசோதனை மையம், மார்பக சிகிச்சை பிரிவு, இதயவியல் சிகிச்சை பிரிவு என 10க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி இந்த மருத்துவ கட்டமைப்பு குறித்தும், வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ கட்டமைப்பை அவர்களுடைய மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை குஜராத் மருத்துவர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Rajiv Gandhi Hospital ,Chennai ,Rajiv Gandhi Government General Hospital ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!