×

பாஜ கைவிட்டால் அதிமுக சின்னாபின்னமாகும் தலையில் கொள்ளிக்கட்டையை தேய்த்துக்கொள்ளும் எடப்பாடி: டிடிவி.தினகரன் கிண்டல்

மதுரை: பாஜ கைவிட்டால் அதிமுக சின்னாபின்னமாகும், தன் தலையில் கொள்ளிக்கட்டையை தேய்த்துக் கொள்ளுகிறார் எடப்பாடி என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று தனியார் விடுதியில் காந்தியடிகள், காமராஜர் உருவப் படங்களுக்கு மலர் தூவி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பாஜ கூட்டணியில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். கூட்டணி குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து டிசம்பர் மாதம் தெரிவிக்கப்படும். பாஜவில் உள்ளவர்கள் என்னோடு பேசி வருகின்றனர். அந்த நண்பர்கள் யார் என்பது குறித்து தெரிவிக்க விரும்பவில்லை.

பாஜவானது அமமுக, சசிகலா வளர்ச்சியை தடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். ஒரு கட்சி மற்றொரு கட்சியின் வளர்ச்சியை தடுப்பது இயற்கையான ஒன்று. அதையெல்லாம் தாண்டித்தான் ஒரு கட்சி வளர வேண்டியுள்ளது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான காவிரி பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கர்நாடகாவில் வன்முறை தூண்டப்படுகிறது. இதே போல் தான் பெரியாறு அணையிலும் பிரச்னை எழுந்தது. தேசிய கட்சிகளால் மாநிலங்களுக்கு பயனில்லை என்பது உறுதியாகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி என்பது தான் அண்ணாவின் கொள்கை.

எனவே அவ்வாறு இருந்தால்தான் சரியாக இருக்கும். பாஜ கைவிட்டால், அதிமுக சின்னாபின்னமாகி விடும். எடப்பாடி பழனிசாமி தனது தலையில் கொள்ளிக்கட்டையை தேய்த்துக் கொண்டுள்ளார். அவர் தனக்கு யார் உதவி செய்தாலும், அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதை பழக்கமாக கொண்டவர். தற்போது தனது ஆட்சியை காப்பாற்றிய பாஜவிற்கே நன்றிக்கடன் செலுத்தி வருகிறார். அதிமுகவின் இரட்டை இலை இல்லை என்றால், அவிழ்த்த நெல்லிக்காய் மூடை போல கட்சி சிதறி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post பாஜ கைவிட்டால் அதிமுக சின்னாபின்னமாகும் தலையில் கொள்ளிக்கட்டையை தேய்த்துக்கொள்ளும் எடப்பாடி: டிடிவி.தினகரன் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,TTV.Thinakaran ,Madurai ,Edappadi ,TTV ,Dinakaran ,
× RELATED யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல்...