×

ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்கு முன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு துணை ஜனாதிபதி ஒப்புதல்: செயலகம் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இரு அவைகளிலும் பெரும்பாலான கட்சிகள் ஆதரவளித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மகளிர் மசோதா சட்ட வடிவம் பெற்றாலும் கூட, அதனை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் தேவைப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதாவது தொகுதி சீரமைப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகிய பணிகளை முடித்த பின்னரே, மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால், அதனை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது வழக்கம். இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத் துணைத் தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதுகுறித்து துணை ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடாளுமன்ற அவைகளால் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, இந்திய அரசியலமைப்பின் 111வது பிரிவின் கீழ், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு துணை ஜனாதிபதி கையெழுத்திட்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்கு முன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு துணை ஜனாதிபதி ஒப்புதல்: செயலகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vice President ,Secretariat Information ,New Delhi ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!