×

பரனூர் சுங்கச்சாவடியில் தொடர் விடுமுறையால் வாகன நெரிசல்

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், நேற்று மிலாதுநபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே வேலை நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் விடுப்பு எடுத்து, தொடர் 5 நாள் விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேற்றிரவு முதல் தென்மாவட்டங்களில் உள்ள மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்து, கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.

இதனால் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று முதல் கடந்த 2 நாட்களாக வெளியூர் செல்லும் வாகனங்களினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்கெனவே தென்மாவட்டங்களுக்கு செல்லும் பகுதியில் 6 கவுன்டர்கள் இயங்கி வந்த நிலையில், நேற்று முதல் கூடுதலாக 2 கவுன்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. எனினும், அங்கு வாகன நெரிசல் குறையவே இல்லை. மேலும், அங்கு வெளியூருக்கு அரசு பேருந்தில் செல்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது. இதுகுறித்து தென்மாவட்ட பயணி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவது தெரிந்தும், பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க எவ்வித முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் வாகனத்தில் காத்திருக்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது என்று வேதனை தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு போலீசார், பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகன நெரிசலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

The post பரனூர் சுங்கச்சாவடியில் தொடர் விடுமுறையால் வாகன நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Paranur ,Chengalpattu ,Tamil Nadu ,Miladunabi festival ,
× RELATED தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்