×

அண்ணாமலைதான் முறிவுக்கு காரணம் எந்த சூழ்நிலையிலும் இனிமேல் பாஜவுடன் கூட்டணி கிடையாது: அதிமுக துணை பொதுச்செயலாளர் திட்டவட்டம்

கிருஷ்ணகிரி: ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். எந்த சூழ்நிலையிலும் பாஜவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ திட்டவட்டமாக தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று காலை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், எந்தவித மாற்றமும் இல்லை.

ஏற்கனவே தமிழக பாஜ தலைமை (அண்ணாமலை) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பாஜ தலைமைக்கு புகார் அனுப்பினோம். இந்நிலையில், அண்ணா மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது, அதிமுகவின் 2 கோடி தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக- பாஜ இடையே கூட்டணி கிடையாது என அறிவித்த பிறகும் ஊடகங்களில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகவிலாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், தவறான கருத்துக்களை தெரிவித்து வருவது ஏற்புடையது அல்ல. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் என இனி எந்த தேர்தல்களிலும், எந்த சூழ்நிலையிலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, ஊடகங்களில் அதிமுக மீண்டும் பாஜவுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆதாயத்திற்காக ஊடகங்களில் விமர்சனம் செய்ததாக கருத வேண்டி இருக்கும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த இந்த இயக்கம், ஒரு கட்சியின் மாநில தலைவரை (அண்ணாமலை) மாற்றவேண்டும் என கூறியதாக கூறுவது, சிறு பிள்ளைத்தனமான கேள்வியாக நான் கருதுகிறேன். அந்த தவறை நாங்கள் எப்போதும் செய்யமாட்டோம். ஒரு கட்சியை இப்படித்தான் நடத்த வேண்டும். தலைவரை மாற்றிட வேண்டும் என கூறும் அளவிற்கு நாகரீகமற்ற தலைவர்கள் நாங்கள் இல்லை. தமிழக மக்களின் நலன், உரிமைகள் சார்ந்தே 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக பொது செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணி சந்திக்கும். இவ்வாறு கே.பி.முனுசாமி எம்எல்ஏ கூறினார்.

The post அண்ணாமலைதான் முறிவுக்கு காரணம் எந்த சூழ்நிலையிலும் இனிமேல் பாஜவுடன் கூட்டணி கிடையாது: அதிமுக துணை பொதுச்செயலாளர் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Baja ,Scheme ,Krishnagiri ,Anamalai ,Thiramakka-Baja ,Annamalayan ,Direct ,Deputy Secretary General Plan ,Dinakaran ,
× RELATED பாஜ தலைவர் அண்ணாமலையுடன் நடிகை...