×

அதிமுக-பாஜ கூட்டணி முறிந்துள்ளதால் பாஜ தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முடியாது என்று அண்ணாமலை கூறியதால்தான், அதிமுக – பாஜ கூட்டணி முறிந்தது. அண்ணா, ஜெயலலிதா பெயரை சொல்லி திசை திருப்ப பார்க்கிறார்கள். பாஜ தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே சட்டப்போராட்டம் ஒரு வகையிலும், மக்களை சந்திப்பது இன்னொரு புறமும் நடைபெறும். இன்று நடைபெறும் சூழ்நிலையை பொறுத்தவரை, நாங்கள் எப்போதும் சொல்லி வந்ததைபோல எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார். ஒரு தலைவருக்கு அரசியலில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும். நாட்டை ஆள்பவர்கள் மக்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அந்த நம்பிக்கைக்கு உரியவர் எடப்பாடி இல்லை என்பதை நாடு அறிந்துள்ளது.

உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்கிறீர்கள். தேர்தல் வரட்டும் சொல்கிறோம். நாங்கள் எடுத்த முடிவில் சென்று கொண்டிருக்கிறோம். பாஜ என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்த்து நாங்கள் முடிவு செய்வோம். கடந்த ஒரு மாதகாலமாக தினந்தோறும் எங்களை பாஜ மேலிட தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மத்திய தலைமையில் இருந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். படிப்படியாக நல்ல நிகழ்வுகள் அமையும். நடைபெற இருப்பது நாடாளுமன்ற தேர்தல்.

இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். தேசிய அளவில் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான் இந்தியாவை ஆள முடியும். 3வது முறையும் பாஜ ஆளும். அவர்கள் கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் எங்கள் முடிவை அறிவிப்போம். அதிமுக – பாஜ முறிவு ஒரு நாடகம் என்று நீங்களே (நிருபர்கள்) சொல்கிறீர்கள். 16 மாநிலங்களில் ஆளும் ஒரு தேசிய கட்சி மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிறது. என்டிஏ கூட்டத்தில் எடப்பாடியை பிரதமர் மோடி பக்கத்தில் உட்கார வைத்து பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு வந்தவுடன், நாங்கள் தான் கூட்டணிக்கு தலைமை என்று எடப்பாடி சொல்லப்போய்தான் பிரச்னை ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை மாற்றுங்கள் என்று பாஜவினர் சொன்னால் அதிமுக ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். அதேபோன்று தமிழக பாஜ தலைவரை மாற்றுங்கள் என்று சொல்வதற்கு எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை முன்னிலைபடுத்தினால் அதிமுக கட்சி தேர்தலில் தோல்வி அடையும் என்றேன். என்னை கூட்டத்தில் இருந்து வெளியேற்றினார்கள். அதே நோய் தான் இன்றைக்கு எடப்பாடிக்கு பிரச்னை. நாங்கள் (ஓபிஎஸ் அணி) பாஜ கூட்டணியில் இருப்போம் என்று நீங்கள் முடிவு எடுக்காதீர்கள்.

பாஜ என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்துதான் நாங்கள் முடிவு எடுப்போம். அகில இந்திய அளவில் பாஜவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அது இல்லை என்று சொல்ல முடியாது. கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். நிர்வாகிகள்தான் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். 2024ம் ஆண்டு தேர்தலில் இதை நிரூபித்து காட்டுகிறோம். பாஜ கட்சியினர் என்ன முடிவு எடுத்து அறிவித்த பிறகுதான் நாங்கள் பாஜ கூட்டணியில் சேருவோமா? இல்லையா? என்று தெரியவரும்.

தேர்தல் வரும் நேரத்தில் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பாஜவுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். என்னடைய செல்போனில் அனைத்து தகவல்களும் இருக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து ேபாட்டியிடவும் எங்களால் உறுதியாக முடியும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநாடு, மழை காரணமாக தள்ளிப்போனது. அதுபற்றியும் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்களுடன் பேசி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் வெல்லமண்டி நடராஜன், சுப்புரத்தினம், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

எடப்பாடியால் அதிமுக 10 முறை தோல்வி
இது குறித்து ஓபிஎஸ் கூறியதாவது: அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வெற்றிபெற முடியும் என்று முதலில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமிதான் முடியாது முடியாது என்கிறார். இதுவரை 10 முறை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். எடப்பாடியை தவிர்த்து கூடிய சீக்கிரத்தில் அதிமுக ஒன்றிணையும். சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். இப்போது ஒரு வாரம்தான் வெளியே வந்திருக்கிறார். விரைவில் சந்திப்பேன். பொதுவாக அதிமுக தொண்டர்களின் இயக்கம். எல்லா தொண்டர்களும், பொதுமக்களும் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். சில நிர்வாகிகள் அதை விரும்பவில்லை. ஈரோடு மாவட்டம் அதிமுக கோட்டை. கொங்கு மக்கள் அதிகம் பேர் உள்ளனர். ஈரோடு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 67 ஆயிரம் வாக்குகளில் அதிமுக தோல்வி அடைந்தது என்றால் மக்கள் எடப்பாடி பக்கம் இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

அண்ணா பிரச்னையில்லை முதல்வர் பதவி தான் பிரச்னை
அதிமுக – பாஜ கூட்டணி முறிவு, அண்ணாவை பற்றி அண்ணாமலை சொன்னது பிரச்னை அல்ல. அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசி, 4 நாட்கள் கழித்து இவர்கள் பிரச்னை கிளப்புகிறார்கள். அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசும்போது, 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜ கட்சி ஆட்சிக்கு வரும் என்றார். பி டீம், சி டீமாக தமிழக பாஜ செயல்படாது என்றார். அதுதான் பிரச்னை. அப்போதுதான் எடப்பாடி விழித்துக்கொண்டு ‘நான் மாப்பிள்ளை இல்லையா’ என்று கேட்டார். 2026ம் ஆண்டு முதல்வராக எடப்பாடி வருவதை பாஜ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னதால்தான் பிரச்னை என்று ஓபிஎஸ் கூறினார்.

The post அதிமுக-பாஜ கூட்டணி முறிந்துள்ளதால் பாஜ தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Baja ,Mukhika-Baja alliance ,O.P. Panneerselvam ,anamalai ,edapadi ,adimachaga-baja alliance ,Anna ,Jayalalitha ,Mukhaki-Baja alliance ,O. Panneerselvam Stir ,Dinakaran ,
× RELATED உ.பி.யில் பழமையான மசூதியை இடித்து பாஜ...