×

பக்தர்களை பாதுகாக்க திருப்பதி மலைப்பாதையில் நவீன பாதுகாப்பு ஏற்பாடு

திருமலை: திருப்பதி மலைபாதையில் வனவிலங்கு தாக்குதலில் இருந்து பத்தர்களை பாதுகாக்க நவீன பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்காக டேராடூன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவனை சிறுத்தை கவ்விச்சென்று பின்னர் விடுவித்தது. இதன்தொடர்ச்சியாக ஒரு சிறுமியை கவ்விச்சென்று கொன்றது. பின்னர் கூண்டு வைத்து தொடர்ச்சியாக 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் விலங்குகள் ஆராய்ச்சியாளர் ரமேஷ் தலைமையில் நிபுணர் குழுவினர் நேற்று திருப்பதி அலிபிரி நடைபாதையில் லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் வரை நடந்து சென்று ஆய்வு செய்தனர். குறிப்பாக சிறுவன் மற்றும் சிறுமி தாக்கப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். அதேபோல் 6 சிறுத்தைகள் பிடிபட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தனர். பக்தர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மலைப்பாதையை கடந்து செல்வதற்கான திட்டங்கள், தாழ்வுபாலம் அல்லது மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் தேவஸ்தான வனத்துறை மற்றும் ஆந்திர வனத் துறையால் எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் வனத்துறை, தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய வனத்துறை அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர் கே.ரமேஷ், அசுதோஷ் சிங், மற்றும் பிரசாத் மகாஜன் நிபுணர்கள் குழுவினர் கூறுகையில், ‘அலிபிரி மலைப்பாதையில் விலங்குகள் செல்வதற்கு கீழ் மற்றும் மேல் பாதைகளுடன் வேலி அமைக்க வாய்ப்பு உள்ளது’ என கூறினார்கள். அப்போது முதன்மை வன பாதுகாவலர் நாகேஸ்வர ராவ், தேவஸ்தான வன அதிகாரி நிவாசுலு மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

The post பக்தர்களை பாதுகாக்க திருப்பதி மலைப்பாதையில் நவீன பாதுகாப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tirupati hill pass ,Tirumala ,Dehradun ,Tirupati hill ,Dinakaran ,
× RELATED திருப்பதி தேவஸ்தானம் பங்களிப்பில் இலங்கையில் ஏழுமலையான் கோயில்