×

தூய்மை பணியாளர் விபத்து இழப்பீடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்: சென்னை மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: விபத்து இழப்பீடு வழக்கில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய ‘வாரன்ட்’ பிறப்பித்து மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மதியழகி. (48). பம்மல் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி பணி முடித்து பம்மல் நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஓட்டுனர் வாகனத்தை திருப்பிய போது, திடீரென அதிலிருந்து மதியழகி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இறந்தார்.

இதையடுத்து, மனைவியின் மரணத்திற்கு இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் நாகராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்கு ஆஜராகும்படி, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு, நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சம்மனை வாங்கியிருந்தும் ஓராண்டாக இன்ஸ்பெக்டர் சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The post தூய்மை பணியாளர் விபத்து இழப்பீடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்: சென்னை மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Motor Vehicle Accident Tribunal ,Chennai ,Traffic Investigation Division ,Chromepet ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...