×
Saravana Stores

நாரதர் திருமாலுக்கு இட்ட சாபம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒரு முறை, சிவபெருமான் பார்வதிதேவிக்கு ராமபிரானின் மகிமைகளை கூறிக் கொண்டே வந்தார். அப்போது, `ராமபிரான் எப்படி அவதரித்தார் என்று தெரியுமா?’’ என திடீரென்று ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பார்வதி, `தெரியுமே ஜெயன் – விஜயன் இட்ட சாபத்தினால்தானே!’’ என்று கேட்டாள்.

`இல்லை பார்வதி. நாரதர் இட்ட சாபத்தினால்தான் திருமால் ராமராக அவதரித்தார்’ என்று சிவபெருமான் கூறினார். அதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தவள், `அப்படியா! இந்த கதை எனக்கு புதியதாக இருக்கிறதே’ என்று பார்வதி கூறியதும், அந்த அறியப்படாத கதையைக் கூறத் தொடங்கினார் சிவபெருமான்.

ஒரு சமயம் நாரதர், கங்கைக்கரைக்கு வந்தார். அங்கு ஓர் ஆசிரமம் இருந்தது. அந்த ரம்யமான சூழ்நிலை, மனதில் தெய்வீக இன்பமான ஊற்று பெருக்கெடுத்தது. அவருக்கு மிகவும் பிடித்துப் போக அங்கேயே அமர்ந்து தியானம் செய்யலாம் என்கின்ற ஒரு உத்வேகம் எண்ணம் அவர் உள்ளத்தில் எழுந்தது. அப்படியே அமர்ந்து, ஆழ்நிலை தியானத்தில் சமாதி நிலையை அடைந்தார். இதனை கண்ட இந்திரலோகத்தில் இருந்த தேவேந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது.

`என்ன இது? `நாரதர் லோக சஞ்சரி. திருமாலின் தீவிர பக்தன். எப்போமே ஹரி நாமம் சொல்வதுதான் அவருடைய ஜென்மப்பயன். அப்படிப்பட்டவர், தியானத்தை மேற்கொண்டு, தவத்தில் வெற்றி பெற்றால், தன்னுடைய இந்திரபதவிக்கு ஆபத்து வந்துடுமோ?’ என தேவேந்திரன் நடுக்கம் கண்டான்.எப்படியாவது இந்த தவத்தைக் கெடுக்க முடிவு எடுத்து சிந்தித்தான்.

“ஹரிமாயை’’ ஏவயென்னினான். ஹரிமாயை என்றால் அனேக அர்த்தமுள்ளது. இங்கு, ஹரிமாயை என்ற பொருளுக்கு, பெண் என்னும் அர்த்தமாகும். பெண்னை வைத்து, ஞானி என்ற ஆணை அதாவது ஆண்களை, மோக இன்பத்தில் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கப்பட்டு விடுகின்றாள். இதனால், ஞான மார்க்கத்தில் இருந்து நிலை குலைந்து போகிறார்கள். பிறவியாக பெறும் பிணிகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். ஞானத்தை பெற்றிருக்கின்ற நாரதரை, ஹரிமாயை (பெண்) கொண்டு வீழ்த்த எண்ணினான் இந்திரன். ஒரு அழகான பெண்ணுக்காக மன்மதன் இடத்தில் போய் கேட்கிறார், தேவேந்திரன்.

`மன்மதனே.. நீ.. எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நாரதனுடைய தவத்தை கெடுக்க வேண்டும். அதற்கு உன் ஆதரவு எனக்கு தேவைப்படுகிறது’ என்று இந்திரன் சொன்னவுடனே, சரி என்று தலையாட்டிவிட்டான் மன்மதன். காரணம், தன்னுடைய வேலையே.. அடுத்தவருடைய மனதை மோக வலையில் ஈர்த்து, உலகத்தில் இனப் பெருக்கத்தை ஏற்படுத்துவதுதான். ஆதலால், சரி என்று மகிழ்வோடு ஒப்புதல் அளித்தான். அதன் பின், ஓர் அழகான பெண் ஒருவள் நாரதர் மீது, தனுசு கொண்டு (வில்) மலர்கணைகளை (பூக்களை) அவர் மீது வீசினான். ஆனால், அவர் எவ்விதமான பாலுணர்வும் ஏற்படாமல் ஹரிமாயையில் இருந்து விடுபட்டு ஞானத்தை பெறுவதற்கு மட்டுமே தவத்தில் ஈடுபட்டிருந்தார். மோகவலையில் அவர் சிக்கவில்லை. நாரதரின் வைராக்கியத்தைக் கண்டு தயக்கமடைந்தான் மன்மதன்.

நாரதர் கண்விழித்தால், கோபத்தில் வெகுண்டு தன்னை சபித்து விடுவாரோ? என்ற அச்சத்தில் நடுநடுங்கி அங்கேயே நின்று கொண்டிருந்தான். நாரதர் கண்விழித்ததும் அவர் திருவடிகளில் விழுந்து தன்னை மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டான் மன்மதன். நாரதரும் கோபம் கொள்ளாமல் மன்னித்து பெருந்தன்மையுடன் அனுப்பிவிட்டார்.இச்செயலானது நாரதர் உள்ளத்தில் ஒரு விதமான பெருமிதத்தை ஏற்படுத்தியது. ஹரியின் பக்தனான தன்னை எந்த காமமும் ஆட்கொள்ளவில்லை என்ற அகந்தை உள்ளத்தில் குடிகொண்டது. “தான்’’னென்ற அகந்தை தோன்றியதும், தலைகணம் ஏற்பட்டது. நாரதர் கைலாயத்தை அடைந்தார். சிவபெருமானை நோக்கி, தான் செய்த தவத்தைக் கெடுக்க இந்திரன், மன்மதன் மூலமாக ஒரு பெண்னை அனுப்பினான். என் தவத்தைக் கலைக்க இயலவில்லை. காமம் என்னை அண்டவில்லை.

தன்னுடைய பெருமையை மிகைப்படுத்தி கூறினான். இதை கேட்ட சிவபெருமான், `ஓ… அப்படியா.. சரி என்னிடத்தில் கூறியதை போல், இந்த செய்தியை திருமாலிடம் சென்று கூறிவிடாதே’ என்று அச்சுறுத்தி அனுப்பிவிட்டார். அதனால், நாரதர் உள்ளத்தில் குறுகுறுவென ஓர் எண்ணம் தோன்றியது. ஏன் சிவபெருமான், தன்னை தடுத்தார்.

என எண்ணி வைகுண்டம் சென்றார்.திருமாலிடம், `நாராயணா! நான் காமத்தை வென்றவன் ஆனேன் எல்லாம் உன்னுடைய அருளால் மன்மதனே என்னிடம் தோற்றுப்போனான்’ என்று அகந்தையோடு பேசினார். அதை அறிந்து கொண்ட திருமால், `ஓ.. அப்படியா.. சரி’ என்று மட்டும்தான் கூறினார். ஆமை ஓட்டின் மேல் மயிர் முளைக்கலாம். மலடியும் மகனை பெற்றெடுக்கலாம். ஆகாயத்திலே தாமரை மலர்கள் பூக்கலாம். நீரைக் கடைந்து வெண்ணெயும் எடுக்கலாம். மணலில் இருந்து எண்ணெயும் ஆட்டி எடுக்கலாம். ஆனால், ராம நாமத்தை துதிக்காமல் மனநோயோ, அகந்தையோ கொஞ்சமும் அகற்றவே முடியாது. நாரதர் நாவில் உன்னால்தான் என்று திருமாலை புகழ்ந்து பேசினாலும், நாரதர் உள்ளத்தில் இருக்கின்ற கபடத்தை அறிந்தார் திருமால்.

`நாரதா, நீ.. தேவரிஷி! பிரம்மச்சாரி விரதத்தைக் கடைபிடிக்கும் பக்தன். பேரின்பத்தால் கொண்டு இருக்கும் தவமே உயர்ந்தது. நீ… காமத்தை வென்றவன்’ என்று புகழ்ந்து வாழ்த்தி அனுப்பினார், திருமால். நாரதரும் விடைபெற்று திரும்பினார். சீலநிதி என்ற ஓர் அழகான நகரத்தை, சீலன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவருக்கு விஸ்வமோகினி என்ற ஒரு மகள் இருந்தாள். அவள் மிகவும் அழகுடையவள்.

அவளுக்கு திருமணம் செய்ய எண்ணி சுயவரத்திற்கு ஏற்பாடு செய்தார் மன்னர். நாரதர், அவ்வழியாக வரும்பொழுது சுயவரச் செய்தியை கேட்டு அரண்மனைக்குள் சென்றார். அரசரும் அவரை வரவேற்று உபசரித்து தன்னுடைய மகளை அறிமுகப்படுத்தினார். இம்முறை, அவளின் அழகை கண்ட நாரதர் மதி இழந்தார். மன்னர், மகளின் எதிர்காலத்தை கூறுமாறு கேட்டதும், பரவசம் அடைந்த நாரதர். `யாரை இவள் திருமணம் செய்து கொள்கிறார்களோ, அவனை ஒருவராலும் வெல்ல இயலாது. இவள் கணவனை உலகம் அனைத்தும் வணங்கும்’. என்று கூறிவிட்டு வைகுண்டத்தை அடைந்தார், நாரதர்.

தன்னை நாடி வந்திருக்கும் நாரதர் இடத்தில் என்ன என்று கேட்டதும், `தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது எனக்கு நீங்கள்தான் அருகில் இருந்து நடத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். திருமாலும், `நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்க `உங்களைப் போன்ற “ஹரிதோற்றம்தான்’’ எனக்கு வேண்டும் அந்த உருவத்தை கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார், நாரதர்.

திருமாலும், `நாரதா.. கவலைப்படாதே. உனக்கு மங்களம் உண்டாகும். அதற்குரிய வழியை நானே செய்கின்றேன். இது சத்தியம்’. என உறுதி அளித்து நாரதரை அனுப்பிவைத்தார், திருமால். நாரதர், நேராக சுயவரம் நடக்கும் மண்டபத்திற்கு வந்தார். சுயவரம் நடந்து கொண்டிருந்தது. ராஜகுமாரி மாலையும் கையுமாக யாருக்கு மாலை போடுவது என அன்னம் போல் நடந்து வந்தாள். அவள் தன்னைத்தான் தேர்ந்தெடுத்து மாலையிடுவாள் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், ராஜகுமாரி நாரதரை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. நாரதருக்கு ஒன்றுமே புரியவில்லை. `இவள் ஏன் தனக்கு மாலை போடாமல், தன்னை கடந்து செல்கிறாள்’ என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

காரணம் என்னவென்றால், நாரதர் அப்பொழுது குரங்கின் வடிவத்தில் தோற்றமளித்தார். வடமொழியில் “ஹரி’’ என்னும் சொல்லிற்கு இரு பொருள்கள் இருக்கின்றன. ஒன்று, நாராயணன், மற்றொன்று குரங்கு என்றும் பொருள். நாரதன், ஹரி என்று கேட்டவுடனே, திருமால் நாரதருக்கு குரங்கு வடிவத்தை கொடுத்து விட்டார். `உங்களுக்கு இந்த ஹரியின் அழகு மிகவும் அழகாக இருக்கிறது. சற்று அந்த அழகை கண்ணாடியில் பார்த்து நீங்களும் ரசித்துக் கொள்ளக் கூடாதா என்று அந்த சபையில் இருந்தவர்கள் அனைவரும் நகைத்தனர்.

நாரதர், கண்ணாடியில் தன் முகத்தை பார்த்த பின்புதான் நாராயணனுடைய முகம் தனக்கு இல்லை என்றும், குரங்கின் கொடூரமான முகம் தனக்கு இருப்பதையும் கண்டு கடும் சினம் கொண்டார். அங்கே சிவகணங்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களிடம், நாரதரின் கோபம் பாய்ந்தன. `நீங்கள் அரக்கர்களாக பிறப்பீர்கள்’ என்று சபித்தார். அதன் பின்பு, கோபத்தோடு புறப்பட்டவர், வழியில் ஒரு ஆற்றைக் கண்டார். அதிலுள்ள நீரில், தன்னுடைய முகத்தைப் பார்த்தார் நாரதர். அதில், குரங்கு வடிவம் தெரியவே, கோபத்தின் உச்சிக்கே சென்றார் நாரதர். தனது பழைய உருவத்தை மாற்றிக்கொண்டு, நேராகத் திருமாலை நோக்கி விறுவிறு வென சென்றார்.

வழியிலேயே திருமால் கண்பட்டார். அருகில் லட்சுமிதேவியும் இருந்தார். பெருமாள் சிரித்துக் கொண்டே, `முனிவரே! ஏன் இந்த பதட்டம் எங்கே சென்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அப்பொழுது நாரதர், என்னை மனிதனாக்கி, ஹரிமாய வலையில் சிக்கச்செய்து, நான் மணந்து கொள்ள விரும்பிய பெண்னை எனக்கு கிடைக்காமல் செய்தாய் அல்லவா! அதே போலவே, நீயும் மனிதனாக பூமியில் பிறந்து, நான் விரும்பிய பெண்ணை இழந்தது போல, நீயும் உன் மனைவியை இழந்து தேடுவாய். என்னை குரங்காக்கி, நகைத்தாய் அல்லவா! ஒரு குரங்கு உனக்கு உதவி செய்து, உன் மனைவியை மீட்டுத் தரும்’ எனத் திருமாலின் மீதும் சாபத்தைப் பொழிந்தார்.

சாபம்விட்ட சிறிது நேரத்தில், கோபம் அடங்கியது. அதன் பின்பு நாரதர், ஹரிமாயை வலையில் இருந்துவிடுபட்டார். நாரதருக்கு சுயபுத்தி வந்தது. அவர் திருமாலின் திருவடிகளில் விழுந்து, `பிரபு என்னை மன்னித்து காப்பாற்றுங்கள்’ என கதறி துடித்தார். நான் தவறு இழைத்துவிட்டேன். நான் இட்ட சாபம் பொய்த்துப் போகட்டும் எனக் கூறி அழுதார். ஆனால், திருமால் அதை ஏற்கவில்லை. `இது நீட்ட சாபம் இல்லை. நான் முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட இச்சையான செயல்’ என்று கூறினார்.

வருத்தத்தோடு நாரதர், திரும்பிக்கொண்டிருக்கும் வழியினில் சிவகணங்கள் நின்று, அவர்களும் மாயையில் இருந்து விடுபட நாரதரிடம் மன்னிப்பு கேட்டனர். அப்பொழுது, நாரதர் சிவகணங்களை நோக்கி, `நீங்கள் என் சாபத்தின் படி அரக்கர்களாக பிறந்து, திருமால் ராமனாக பிறந்து, உங்களை சம்ஹாரம் செய்வார். அதனால், நீங்கள் முக்தி அடைவீர்கள் என்று வாழ்த்தினார்.

தொகுப்பு: பொன் முகரியன்

The post நாரதர் திருமாலுக்கு இட்ட சாபம்! appeared first on Dinakaran.

Tags : Kunkumam ,Shiva Peruman ,Parvadidevi ,Ramabran ,Naradar Tirumal ,
× RELATED தடம்புரளும் தாம்பத்ய ரயில்