×

திருவரங்குளம் ஒன்றியப் பகுதியில் 300 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புதுக்கோட்டை, செப்.28:புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.மெய்யநாதன் நேற்று பல்வேறு பணிகளை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது;தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் இன்றையதினம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

அதன்படி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கத்தக்குறிச்சி, வாண்டாக்கோட்டை மற்றும் வல்லத்திராக்கோட்டை பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதிகளில் உள்ள குறைந்த மின்அழுத்தம் சரிசெய்யப்பட்டு, வீட்டு மின்சாரம், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் வல்லத்திராக்கோட்டையில் பெரமர் திரவுபதியம்மன் கோவில் முன் மண்டபம் மராமத்து பணியும் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 65 மாணவர்களுக்கும், 86 மாணவிகளுக்கும் மற்றும் வேங்கிடகுளம் தூய வளனார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 78 மாணவர்களுக்கும், 71 மாணவிகளுக்கும் என மொத்தம் 300 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14,48,020 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இம்மாணவ, மாணவிகள் நாள்தோறும் பள்ளிக்கு மிதிவண்டிகளை பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கான உடற்பயிற்சியாக அமைவதுடன், சரியான நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவர முடியும்.மேலும் பள்ளித்திவிடுதி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பிலான பணிகள் அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைவதுடன், வளர்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும். மேலும் சேந்தன்குடி பகுதியில் பகுதிநேர கால்நடை மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதி கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கான மருத்துவ வசதியினை வீடுகளுக்கு அருகாமையிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் கால்நடைகளுக்கான மருத்துவ சேவையினை பெற்று, நோயில்லாமல் கால்நடைகளை வளர்த்து பயன்பெறலாம்.எனவே பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சிகளில், மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி).ராஜேஸ்வரி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர்.வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர்.விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்.ஆயிஷாராணி, தலைமையாசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post திருவரங்குளம் ஒன்றியப் பகுதியில் 300 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் appeared first on Dinakaran.

Tags : Thiruvarangulam union ,Pudukottai ,Minister of Environment and Climate ,Change Department ,Meyyanathan ,Pudukottai district ,Thiruvarangulam panchayat union ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...