×

வடகிழக்கு பருவமழைக்கு முன்பு கோயில் குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கோயில் குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்டு மழைநீரை சேகரிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோயிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்திட ரூ.31.5 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் பணி மற்றும் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றபின், ரூ.31.24 கோடி மதிப்பீட்டில் 51 புதிய மரத்தேர்கள் செய்வதற்கும், ரூ.4.12 கோடி மதிப்பீட்டில் 13 மரத்தேர்களை மராமத்து செய்வதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.10 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தங்கத்தேர் மற்றும் மரத்தேர் பணிகளை தவிர்த்து சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுர விமானங்கள் மற்றும் சன்னதிகளின் மராமத்து பணி மற்றும் வர்ணம் பூசும் பணி, பிரகாரத்தில் கருங்கல் பதிக்கும் பணி, மின் பணிகள், நந்தவனத்தை சீரமைத்தல், காரியக் கூடம் திரும்ப கட்டுதல், திருக்குளத் திருப்பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை சென்னை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர், கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முழு ஈடுபாட்டோடு கண்காணித்து விரைவுப்படுத்தி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் நிறைவுற்று குடமுழுக்கு நடத்தப்படும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கோயில்களின் அனைத்து குளங்களையும் சுத்தப்படுத்தி மழைநீரை சேகரித்து தேக்குவதற்கான கட்டமைப்புகளை சீரமைத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஏற்கனவே துறையால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கோயில் குளங்கள் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்டு மழைநீரை சேகரிக்கும் வகையில் தயாராகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் நித்யா, சென்னை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெற்றிக்குமார், அறங்காவலர்கள் கோபிநாத், குமாரசாமி, ரத்தினம், லீலாவதி, செயல் அலுவலர் ராமராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வடகிழக்கு பருவமழைக்கு முன்பு கோயில் குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : northeastern ,Minister ,Zegarbabu ,Chennai ,north-east ,Segarbabu ,
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...