×

செங்கல்பட்டில் பிறந்த பழம்பெரும் நடிகை வகீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: செங்கல்பட்டில் பிறந்த பழம்பெரும் நடிகை வகீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பழம்பெரும் தமிழ் நடிகை வகிதா ரஹ்மான். 85 வயதாகும் இவர் தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் பிறந்தவர். நடனம் மற்றும் நடிப்பின் மீது பேரார்வம் கொண்ட இவர் முதன்முதலில் எம்.ஜி.ஆர் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ தமிழ் படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கினார். இப்படம் 1956ல் வெளியானது. ஆனால், தெலுங்கில் இவர் பணியாற்றிய அக்கினேனி நாகேஸ்வர ராவின் ‘ரோஜுலு மராயி’ மற்றும் ‘ஜெயசிம்ஹா’ படம் 1955ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு ஏராளமான இந்தி படங்களில் நடித்தார்.

சுமார் 68 ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சிய அவருக்கு இந்த ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்த விருது 2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும். இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதை ேதர்வு செய்ய 5 பேர் கொண்ட நடுவர் குழுவில் கடந்த ஆண்டு தாதாசாகேப் விருது பெற்ற ஆஷா பரேக், நடிகர்கள் சிரஞ்சீவி, பரேஷ் ராவல், ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி, திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் நடிகை வகீதா ரஹ்மானை தேர்வு செய்துள்ளனர். நடிகை வகீதா ரஹ்மான் பத்ம, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார்.

நடிகை வகீதா ரஹ்மான் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். இந்தியில் நடிகர் தேவ் ஆனந்துக்கு ஜோடியாக சிஐடி படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தேவ் ஆனந்த்துடன் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் விஸ்வரூபம் 2ம் பாகத்தில் கமலின் தாயாகவும் அவர் நடித்திருந்தார். தற்போது அவருக்கு வாழ்நாள் சாதனையான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

The post செங்கல்பட்டில் பிறந்த பழம்பெரும் நடிகை வகீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Wakeeta Rahman ,Union Govt. ,New Delhi ,Union Government ,Chengalpat ,Vakeeta Rahman.… ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...