×

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம், செப்.26: நடப்பு 2023ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது பெறுவதற்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ் வளர்ச்சித்துறையில். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த்தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச் செம்மல் விருது”, கடந்த 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ₹25 ஆயிரம் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் இருந்து 2023ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள், தன்விவரக்குறிப்பு, 2 நிழற்படம், ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் அக்டோபர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, தமிழ்ச்செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக்கூடாது. மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக்காவலர், தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருபவராகவும் இருத்தல் கூடாது. இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Collector ,Karmegam ,Dinakaran ,
× RELATED மே 22-ல் ஏற்காடு கோடை விழா: சேலம் ஆட்சியர் அறிவிப்பு