வடலூர்: பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட மகளிரணி நிர்வாகிகள் மீது நாற்காலிகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் லாட்ஜில் பாஜ செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில், நகர பொதுச்செயலாளர் பாலு, நகர தலைவர் திருமுருகன் ஆகியோர் மகளிர் அணி பொதுச்செயலாளர் சுதா ராஜேந்திரன் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினர். குறிப்பாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பாராட்டு தெரிவித்து நடத்திய நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்களிடம் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை.
வடலூர் நகரில் இருந்து மகளிர் நிர்வாகிகளை அங்கு அழைத்து சென்றது ஏன்? அந்த பகுதியில் யாருமே இல்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சுதா ராஜேந்திரன், உங்களுக்கு தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தலைமையிடம் தெரிவித்தால் போதும் என கறாராக கூறினார். இதனால் சுதா. ராஜேந்திரனுக்கும், அவருக்கு ஆதரவாக இருந்த நகர செயலாளர் ஷாம் சுந்தருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆபாச வார்த்தைகளால் சுதா ராஜேந்திரனை திட்டினர். பதிலுக்கு அவர், இரவு நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் ஏன் மகளிர் அணியை சேர்ந்த பெண்களுக்கு தொலைபேசியில் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுக்கிறீர்கள்.
யார்? என்னவெல்லாம் பேசினீர்கள் என்பது தெரியும் என பதிலளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கதவை பூட்டி நாற்காலிகளை எடுத்து சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இந்த மோதல் அரை மணி நேரம் நீடித்தது. மாவட்ட பொறுப்பாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, மேலிட பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் தலையிட்டு நிர்வாகிகளை சமரசம் செய்து வைத்தனர்.
The post பெண் நிர்வாகிகளுக்கு பாலியல் தொல்லை தட்டிக்கேட்டதால் நாற்காலியால் தாக்குதல்: பாஜ செயற்குழுவில் பரபரப்பு appeared first on Dinakaran.