×

வண்டலூர் அருகே இடி தாக்கி மின்சாதன பொருட்கள் நாசம்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி கொளப்பாக்கம், அண்ணா நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சந்திரன் (62). இவர் சென்னை கே.கே.நகரில் உள்ள ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவி விமலா (52) மகன்கள் மோகன்ராஜ் (30), விஜயகுமார்(25) ஆகியோர் உள்ளனர். இதில், மோகன்ராஜ் திருமணமாகி சேலத்துக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், விமலா, அவரது கணவர் சந்திரன் மற்றும் மகன் விஜயகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தனர். இதில், விமலா குடிசை வீட்டில் உள்ளேயும், கணவர் வெளியேயும், மகன் மற்றொரு குடிசை வீட்டில் கொசுவலை அமைத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதி முழுவதும் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பின்னர், மழை நின்றதும் பயங்கர சத்தத்துடன் வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்திலும், விமலா படித்திருந்த குடிசை வீட்டிலும் இடி விழுந்தது. இதில், வீட்டிலிருந்த சுவிட்ச் ஆப் பாக்ஸ், மீட்டர் மற்றும் மின்விளக்குகள் வெடித்து சிதறியது. இதில் அலறி துடித்த விமலா, சந்திரன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே ஓடினர். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் திரண்டு ஓடி வந்தனர். இதில் தென்னை மரமும், குடிசை வீடும் தீப்பற்றி எரிய தொடங்கின.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரத்தில் உள்ள தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள், பொதுமக்கள் திரண்டு வந்து அங்கிருந்த தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனாலும், புகைமூட்டம் காணப்பட்டதால் தீயணைப்பு துறையினர் வீடுகள் முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். பின்னர், மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதில் இடி தாக்கியதில் வீட்டிலிருந்த டிவி, பேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

The post வண்டலூர் அருகே இடி தாக்கி மின்சாதன பொருட்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Kooduvancheri ,Chandran ,Anna Nagar, Thiruvalluvar Street ,Chennai ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை