×

மின் கட்டணம் மறுபரிசீலனை கோரி தொழில் துறையினர் ஸ்டிரைக்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை மறுபரிசீலனை கோரி தொழில் துறையினர் ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், பரபரப்பு நேர கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மல்டி இயர் டாரிப் கட்டணத்தை ரத்து செய்யவும் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றன. இது குறித்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபி பழனியப்பன் கூறும்போது, ‘‘இந்த போராட்டத்தில் ரூ.150 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார். ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களான ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கான்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நேற்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதுகுறித்து, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், உற்பத்தி நிறுத்தம் மூலம் சுமார் ரூ.300 முதல் ரூ.500 கோடி வரை உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கோவை: கோவையில் 30 ஆயிரம் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. இதில் கொடிசியா, காட்மா, சீமா, ஓஸ்மா, கோப்மா உள்ளிட்ட தொழில் அமைப்புகள் பங்கேற்றன.
அரிசி ஆலைகள் ஸ்டிரைக்: தமிழகத்தில் தஞ்சாவூர், சீர்காழி, சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 7 ஆயிரம் அரிசி ஆலைகள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி பாதித்துள்ளது என சங்கத்தினர் தெரிவித்தனர்.

The post மின் கட்டணம் மறுபரிசீலனை கோரி தொழில் துறையினர் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Tamil Nadu Power Board ,Dinakaran ,
× RELATED கோடை கால மின்தேவையை பூர்த்தி செய்ய...