×

அதிமுக ஆட்சியில் அரசு நிலத்தை வளைத்துப் போட்ட பாஷ்யம் நிறுவனம் கோயம்பேட்டில் உள்ள 10.5 ஏக்கர் நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயம்பேட்டில் உள்ள 10.5 ஏக்கர் நிலத்தை மீட்டு, நிலத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி அந்த நிலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு அரசு பயன்படுத்த வேண்டும். அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோயம்பேட்டை ஒட்டி இருக்கும் அமைந்தகரை தாலுகா, பூந்தமல்லி சாலையில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கு சதுர அடி 12 ஆயிரத்து 500 ரூபாய் என்று குறைந்த விலையில் விற்பனை செய்து அதிமுக ஆட்சியில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி திருத்திய அரசாணை தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஷ்யம் நிறுவனம் தரப்பில் அதன் பவர் ஆப் அட்டர்னி சரவணபவன் ஓட்டல் பங்குதாரர் ஆர்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கடந்த 1943ல் கோயம்பேடு கிராமத்தில் கிராம நத்தமாக வகை மாற்றம் செய்யப்பட்ட 4.17 ஏக்கர் நிலம் துரைசாமி நாயுடு என்பவருக்கு தரப்பட்டது. அந்த நிலத்தை அவரது வாரிசுகள் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதில் அவரது வாரிசுகள் 3.45 ஏக்கர் நிலத்தை கடந்த 1994 மற்றும் 1996ல் ஓட்டல் சரவண பவனுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த நிலத்திற்கு பட்டா தர தாசில்தார் மறுத்துவிட்டார்.

மனுதாரர் மீண்டும் 2019ல் நில நிர்வாக கமிஷனரிடம் மேல் முறையீடு செய்தார். அதை ஆய்வு செய்தபிறகு 2021 பிப்ரவரி 8ம் தேதி நிலம் மனுதாரருக்கு தரப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது என்றார். அதற்கு, நில நிர்வாக ஆணையர் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமன்லால் ஆஜராகி, பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் கோரும் 3.45 ஏக்கர் நிலம் சர்கார் புறம்போக்கு கிராம நத்தம் என்று வருவாய் ஆவணங்களில் உள்ளது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்து அந்த நிலத்தை ஓட்டல் சரவண பவன் ஆக்கிரமித்துள்ளது என்றும் அந்த இடத்தில் மனுதாரர் நுழைய தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில்தான் 2022 நவம்பர் 4ம் தேதி அரசு புறம்போக்கு நிலமான இந்த இடத்தில் அரசு பயன்பாட்டுக்காக கொண்டு வர அரசாணை பிறப்பித்துள்ளது. மனுதாரர் இந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவு வருமாறு: அரசு புறம்போக்கு கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் ரூ.1575 கோடி செலவில் மால் கட்டிவருகிறது. அரசு நிலம் தனியார் வர்த்தக பயன்பாட்டுக்கு சட்டவிரோதமாக தந்ததை சட்ட ரீதியாக ஏற்க முடியாது. கிராம நத்தம் இடத்திற்கு அரசுதான் பாதுகாவலர். அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்வது வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதில் ஒட்டுமொத்த பணம் படைத்த அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் பங்கு வகித்துள்ளனர்.

அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள்தான் இந்த சட்ட விரோத செயல்களை செய்துள்ளனர். ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதேபோல் செயல்படுவது வாடிக்கையாக உள்ளது. முழுமையாக மீட்டு, வேலி அமைத்து, பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அதிக மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள், பொது ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கட்டமைப்பு ஊழல் அனைத்து வகைகளிலும் சமூக சாத்தான் போல் பரவி வருகிறது. குறிப்பாக அரசு நிலத்தை வேறு பணிகளுக்கு மாற்றம் செய்வதில் வெளிப்படையான நடைமுறைகள் இல்லை.

எனவே, அரசு நிலங்களை அபகரிப்பு, ஆக்கிரமிப்பை தடுக்கவும் ஆக்கிரமிப்பாளர்களை தண்டிக்கவும் சிறப்பு சட்டம் கொண்டு வரப்படவேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசியல்வாதிகள் அதிகாரிகளுடன் சேர்ந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களை செய்துவருகிறார்கள். அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நில ஆக்கிரமிப்பு என்பது மற்றவர்களின் பொருட்களை திருடுவது போன்றதுதான். இதில் அரசு நிலத்தை திருடுவதை தீவிரமாக பார்க்க வேண்டும்.  தனிப்பட்ட லாபத்திற்காக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் பின்புற வாசல் நடைமுறைகளால் தப்பித்து விடுகிறார்கள். அவர்களை விட்டுவிடக்கூடாது.

அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அரசு நிலத்தை அபகரிக்கும் திட்டமிட்ட ஊழல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களை அடையாளம் காணவும், அரசு நிலங்கள் சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்தது குறித்தும், குத்தகை பாக்கியை வசூலிப்பது குறித்தும் ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அரசு அமைக்க வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு நிலத்தை மீட்டு அந்த நிலத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி அந்த நிலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு அரசு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு என்று கூறியுள்ளார்.

The post அதிமுக ஆட்சியில் அரசு நிலத்தை வளைத்துப் போட்ட பாஷ்யம் நிறுவனம் கோயம்பேட்டில் உள்ள 10.5 ஏக்கர் நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Bhashyam Corporation ,AIADMK ,Govt. ,Chennai ,Koyambhet ,Bhashyam Company ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு