×

எண்ணெய் தாவரங்களுக்கு உதவும் பூஞ்சைக்காளான்

ஒரு வகையான எண்ணெய் வித்து தாவரங்கள், பூஞ்சைக்காளான் ஆகியவற்றை செயற்கையாக இணைத்து, இரண்டும் ஒன்றுக்கு ஒன்று உதவி, இரண்டு தாவர வகைகளும் பயனுறும் வகையில் ஆராய்ச்சி செய்து அசத்தியுள்ளனர் பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள். இதனால் எண்ணெய் வித்து தாவரங்களை பூச்சி தாக்கா வண்ணம் பூஞ்சைக் காளான் உதவியும், தாவரத்திலிருந்து மேம்பட்ட, பயனுள்ள வேதிப்பொருட்கள் அதிகம் உற்பத்தி செய்யப்பட உதவியும், புறஊதாக் கதிர்களால் பூஞ்சைக் காளானுக்கு ஏற்படும் அபாயங்கள் குறைந்து போவது (காரணம்-பிளேவினாய்ட்ஸ்), இரு தாவர வகைகளுக்கும் பயனளிப்பதாக இருப்பதை ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளனர். இந்த வகையில், செயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு குறைவதால், சூழல் பாதுகாப்பும், புவி வெப்பமடைதல் (பூச்சிக்கொல்லி மருந்தின் தேவை இல்லாது போவதால்) பாதிப்பும் குறைவது உறுதி செய்யப்படுகிறது.பூஞ்சைக் காளான் (பெவேரியானா பேசியானா) இயற்கையாக காடுகளில் வளர்ந்து, அதிலுள்ள வேதிப்பொருட்கள், உயிர்ம-பூச்சிக்கொல்லியாக பயன்பட்டாலும், புற ஊதாக் கதிர்கள் தாக்கம் காரணமாக அவற்றின் வளர்ச்சி குறைகிறது. இதை ஈடுகட்ட, அவற்றை மேம்போக்காக தெளிக்காமல், எண்ணெய் தாவரத்தின் உட்பகுதியில் செயற்கையாக செலுத்துவதால், அவை புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதுடன் (தாவரத்தில் இருந்து வெளியாகும் பிளேவனாய்ட்ஸ் வேதிப்பொருள் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது) எண்ணெய் தாவரங்களை தன்னிலிருந்து வெளியாகும் வேதிப்பொருள் காரணமாக பூச்சிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன.

இதனால் எண்ணெய் தாவரங்களிலிருந்து பிளேவனாய்ட்ஸ் எனும் வேதிப்பொருட்கள் அதிகம் உற்பத்தியாகி, அவை மனித சுகாதாரத்தை காப்பதில் பெரும் பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது. பிளேவனாய்ட்ஸ் வேதிப்பொருட்களுக்கு புற்றுநோய் தடுப்புத் தன்மை, அழற்சி தடுப்புத் தன்மை, வைரஸ் எதிர்ப்புத் தன்மை, பொதுவாக சுகாதாரத்தை மேம்படுத்தும் தன்மை, புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு, பூச்சிக்கொல்லியாக செயல்படும் தன்மை போன்றவை இருப்பதால், ஒன்றுக்கொன்று உதவிசெய்து கொள்கின்றன. துர்கு பல்கலைக்கழக ஆய்வில் பூஞ்சைக் காளான் எப்படி எண்ணெய் தாவரங்களை பூச்சிகளிலிருந்து தற்காப்பு செய்கிறது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. இங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. எண்ணெய் தாவரம், பூஞ்சைக் காளானை உள்நுழையும் எதிரியாக பார்த்து, அதற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்பதுதான் அது. மேலும் பயிர்வளம் மேம்பட்டு, செயற்கை வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையின்றி சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைதல் உறுதிசெய்யப்படுவதால் நாமும் இதுபோன்ற ஒன்றுக்கொன்று உதவும் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி அதை பயன்பாட்டிற்கு கொண்டு
வந்தால் நல்லது.

– மரு.வீ.புகழேந்தி.
உறுப்பினர்,
சூழல் பாதுகாப்பிற்கான
மருத்துவர் குழு.

The post எண்ணெய் தாவரங்களுக்கு உதவும் பூஞ்சைக்காளான் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!