×

டெல்டாவின் முக்கிய நிர்வாகிகளை ஒதுக்கிவைத்திருக்கும் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டெல்டா நிர்வாகிகளை சந்தேக கண் கொண்டு பார்க்கிறாராமே சேலத்துக்காரர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலத்துக்காரரின் கை ஓங்கிய பிறகு தனக்கு வேண்டிய முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாஜி அமைச்சர்கள் சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வருகிறாராம். இலை கட்சியின் முக்கிய மீட்டிங், தலைநகர் செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் சிலர் மட்டுமே சென்று வருகிறார்களாம். ஆனால், கடலோர மாவட்டம் உள்ளிட்ட டெல்டாவில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை யாரும் அவர் அழைப்பதில்லையாம்.

இதற்கு முக்கிய காரணம், சேலத்துக்காரருக்கு ஆதரவாக கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாக தெரிவிப்பது இல்லை என்பதுதானாம். முக்கியமான நேரங்களில் அவர்கள் மவுனமாகவே இருந்து வருகிறார்களாம். இதனாலேயே இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சேலத்துக்காரர் நம்பாமல் உள்ளார்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு காரை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துறாங்கனு புகார் வந்திருக்கே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கவர்மெண்ட் சார்புல அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிங்க ஆய்வுக்கு செல்றதுக்கும், மக்கள் பணிக்காகவும் கார் கொடுத்திருக்காங்க. அதேபோல வெயிலூர் மாவட்டத்துலயும் அதிகாரிங்களுக்கு கார் கொடுத்திருக்காங்க. இதுல வெயிலூர் மாவட்டத்துல இருக்குற ஊர் அக வளர்ச்சித்துறை மட்டும் இல்லாம பல துறைகளோட அதிகாரிங்க அலுவல் பணிகளுக்காக வழங்கப்பட்ட கவர்மெண்ட் கார, பர்சனல் யூஸ்க்கு பயன்படுத்துறாங்களாம்.

இதுல வேடிக்கை என்னன்னா?, அந்த கார்கள்ல குடும்பத்தோட லீவு நாட்கள்ல மலைவாசஸ்தலங்களுக்கு ஜாலி டிரிப்பும் அடித்து வந்ததுதானாம். அதுமட்டுமில்லாம, அதற்கான எரிபொருளும் கவர்மெண்ட் கணக்குலயே சேர்த்துட்டாங்கன்னு, நியாயமான அதிகாரிங்க சிலர் சொல்லி வருத்தப்படுறாங்க. இதனால கவர்மெண்ட் கார்களோட டிரிப் ஷீட்டை முறைப்படி பராமரிச்சு கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்குது. இது வெயிலூர் மாவட்டம் மட்டுமில்ல, குயின்பேட்டை, மிஸ்டர் பத்தூர் மாவட்டங்கள்லயும் நடக்குதாம். ஒட்டுமொத்தமா கண்காணிச்சா பலபேர் சிக்குவாங்கன்னு பேச்சு பலமா அடிபடுது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பின்வாசல் அரசியலால் அதிர்ந்து போனாராமே தாமரை எம்எல்ஏ…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரியின் சனி மூலையில் இருக்கும் தொகுதியை சேர்ந்த பாஜ எம்எல்ஏ, சட்டசபை கூடிய தினத்தில் சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். முன்னதாகவே தன்னுடைய போராட்டத்துக்கு தாமரை எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை கேட்டிருந்தார். எல்லோருடைய கோரிக்கைக்காக போராடும் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது எங்களின் முதல் வேலை என அப்போது பாஜக எம்எல்ஏவை உசுப்பிவிட்டுள்ளனர். புல்லட் சாமியின் செயலை யாருமே தட்டிக்கேட்காததால், அவர் இஷ்டத்துக்கு போய்கொண்டிருக்கிறார். தொகுதிக்கு வேண்டியதை கேட்டால் செய்ய மறுக்கிறார்.

அவருடன் இருக்கும் நல்லவன் பெயரை கொண்ட அதிகாரிதான் எல்லாவற்றையும் கெடுக்கிறார். முதலில் நல்லவனை பொதுவெளியில் அம்பலப்படுத்துவோம். அடுத்ததாக புல்லட்சாமிக்கு வருவோம். துணிந்து செய்யுங்கள், நாங்களும் வந்து உங்களுடன் சட்டசபை படிக்கட்டில் அமர்கிறோம் என்று கூறினர். இதனை நம்பிய பாஜ எம்எல்ஏ, அப்பாவியாக வந்து தர்ணாவில் ஈடுபட்டார். ஒரே ஒரு சுயேச்சை எம்எல்ஏ மட்டும்தான் அவருக்கு ஆதரவாக வந்து நின்றார். மற்றவர்கள் எல்லாம் பின்வாசல் வழியாக வந்து புல்லட்சாமிக்கு புன்னகை பூக்க வணக்கம் தெரிவித்தனர். சிலர் ஒரு படி மேலேபோய் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு இருக்கைக்கு சென்றனர்.

இதில் பாஜ நியமன எம்எல்ஏ பாபு, வழி தெரியாமல் முன்வாசல் வழியாக வந்துவிட்டார். அப்போது பாஜ எம்எல்ஏவை பார்த்து, நமட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டாராம். கடைசிவரை அவருடன் யாருமே வரவில்லையாம். பாஜ எம்எல்ஏக்களின் உரிமைக்காக பல முறை போராடியிருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் சுயரூபம் இப்போதுதான் தெரிந்தது என பாஜ எம்எல்ஏ நெருக்கமானவர்களிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். இனிமேல் அவர்கள் என்னிடம் வந்து எதையாவது கேட்கட்டும். அப்புறம் பார்த்துக்கொள்கிறேன் என கடுகடுப்புடன் சொன்னாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டிரான்ஸ்பர் போட்டும் காலி பண்ணாம இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாநகராட்சியில் நிர்வாக வசதிக்காக சமீபத்தில் உயரதிகாரிகள் பலர் மாநகராட்சி விட்டு மாநகராட்சி, மாவட்டம் விட்டு மாவட்டம் என இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில், ஒருசிலர் மட்டுமே இடமாறுதல் உத்தரவை ஏற்று, பணியில் சேர்ந்துள்ளனர். முக்கியமான 4 அதிகாரிகள் இடமாறுதல் உத்தரவை ஏற்கவில்லை. கோவையில் இருந்து நகர்ந்து செல்லவும் இல்லை. அதாவது, ஐந்து எழுத்து பெயர் கொண்ட இரு உதவி கமிஷனர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு விட்டாலும் அவர்கள், கோவையை விட்டு செல்லவில்லை.

இதேபோல், இரண்டு எழுத்து பெயர் கொண்ட உதவி நகரமைப்பு அலுவலர், முருகப்பெருமானின் மற்றொரு பெயர் கொண்ட உதவி நிர்வாக பொறியாளர் ஆகியோரும் இடமாறுதல் உத்தரவை ஏற்கவில்லை. மாநகராட்சியின் சட்ட விதிகளின்படி இடமாற்றம் செய்யப்பட்டாலும், இவர்கள் நாலு பேரும், சில.. பல.. சிபாரிசுகளை பிடித்து, இங்கேயே நங்கூரம் போட கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்களாம். ஏற்கனவே, பல லட்சங்களை சம்பாதித்து பழக்கப்பட்டு விட்டதால், பசையுள்ள இடமான கோவையை விட்டு இடம் மாறுவதற்கு இவர்களுக்கு மனம் வரவில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post டெல்டாவின் முக்கிய நிர்வாகிகளை ஒதுக்கிவைத்திருக்கும் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,Delta ,Peter ,Saletaka ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்