×

கொய்யாதோப்பு, சேத்துப்பட்டு, கோட்டூர்புரத்தில் ₹409.74 கோடியில் 2364 அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: சென்னை கொய்யாதோப்பு, சேத்துப்பட்டு, கோட்டூர்புரத்தில் ₹409.74 கோடியில் 2364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் ₹61.20 கோடி மதிப்பீட்டில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் திட்டப்பகுதியில் ₹41.30 கோடியில் 240 புதிய குடியிருப்பு, கோட்டூர்புரம் திட்டப் பகுதியில் ₹307.24 கோடியில் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஆக மொத்தம் 3 திட்டப் பகுதிகளில் ₹409.74 கோடியில் 2364 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. 18 மாதத்தில் பணிகள் நிறைவு செய்து குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கே.பி பார்க் திட்டப்பகுதியில் ₹1.31 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தையும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளியில் 39 ஸ்மார்ட் வகுப்பறையையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்சி துறை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், நே.சிற்றரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கொய்யாதோப்பு, சேத்துப்பட்டு, கோட்டூர்புரத்தில் ₹409.74 கோடியில் 2364 அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Koyathoppu, Chetupatta, Koturpuram ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Koyatopu, Sethupattu, Kotturpuram ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...