×

சசிகலா, டிடிவி, ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்தியவர்; ஐபிஎஸ்சிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் இபிஎஸ்: ஊழல் புகாரில் சிக்கியதால் பரிதாபநிலை என தொண்டர்கள் கொதிப்பு

சென்னை: சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்திய இபிஎஸ், ஊழல் புகாரில் சிக்கியுள்ளதால் மாஜி ஐபிஎஸ் அதிகாரியிடம் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறைக்கு சென்றபோது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். அப்போது டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டிடிவி தினகரனை ஓரங்கட்டினார். பின்னர் சசிகலாவை ஓரங்கட்டினார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தார். அதிமுகவை கைப்பற்றி அவரையும் எளிதாக காலி செய்தார். ஆனால் தற்போது கூட்டணியில் உள்ள மாஜி ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையிடம் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார்.

ஏனெனில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4800 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. அதோடு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது பினாமிகள், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை ஒன்றிய அரசு முடிக்காமல் உள்ளது. அதற்கு காரணம், எடப்பாடி பழனிச்சாமி எப்போது முறைத்துக் கொண்டாலும் அதை எல்லாம் தூசி தட்டி எடுக்கலாம் என்பதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

இதைத் தெரிந்து கொண்ட மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை, அதிமுகவை உண்டு இல்லை என்று செய்து வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த பலரையும் கட்சியில் இணைத்தார். அதிமுக தலைவர்களான ஜெயலலிதாவை மோசமான முதல்வர் என்று விமர்சித்தார். அண்ணாவின் பெயரில்தான் எடப்பாடி பொதுச் செயலாளராக உள்ள கட்சி உள்ளது. இதனால் அண்ணாவை விமர்சித்தபோது ஆரம்பத்தில் கொந்தளித்த அதிமுகவினர் தற்போது பெட்டிப் பாம்பாக அடக்கி வாசிக்கின்றனர். அண்ணாமலையை மாற்ற தலைகீழாக நிற்கின்றனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இபிஎஸ்சின் பருப்பு அண்ணாமலையிடம் வேகவில்லை. பொதுக்குழுவைக் கூட்டி பன்னீர்செல்வத்தை தூக்கி எறிந்தபோது இருந்த இபிஎஸ்சின் வேகம் அண்ணாமலை விவகாரத்தில் வாய் மூடி மவுனியாக இருப்பதாக அதிமுகவினரே குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் அதிமுக தலைவர்கள் மீதான ஊழல் புகார்தான். இதனால்தான் மாஜி ஐபிஎஸ்சிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறார் இபிஎஸ் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

The post சசிகலா, டிடிவி, ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்தியவர்; ஐபிஎஸ்சிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் இபிஎஸ்: ஊழல் புகாரில் சிக்கியதால் பரிதாபநிலை என தொண்டர்கள் கொதிப்பு appeared first on Dinakaran.

Tags : Sasikala ,DTV ,O. Panneerselvam ,EPS ,IPSC ,Chennai ,Dhinakaran ,IPS ,Dinakaran ,
× RELATED வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்...