×

இன்றும், நாளையும் விநாயகர் ஊர்வலம்; தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு: சென்னை, தாம்பரம், ஆவடியில் 2,148 விநாயகர் சிலைகள் இன்று முதல் கரைப்பு


சென்னை: தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. 1.2 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, தாம்பரம், ஆவடியில் பிரதிஷ்டை செய்த 2,148 விநாயகர் சிலைகளை கரைக்கும் போது அசம்பாவிதங்களை தடுக்க 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கடந்த 18ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு சென்னை மாநகர காவல் எல்லையில் 1,519 சிலைகள் வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பாளர்களுக்கு போலீசார் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினர்.

அதன்படி கடந்த 18ம் தேதி போலீசார் அனுமதி அளித்த இடங்களில் 1,519 சிலைகள் பொதுமக்கள் முன்னிலையில் இந்து அமைப்புகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க இந்து அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை காவல் எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 17 வழித்தடங்களிலும், தாம்பரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 4 வழித்தடங்கள், ஆவடி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 5 வழித்தடங்கள் என மொத்தம் 26 வழித்தடங்களில் மட்டும் ஊர்வலமாக கொண்டு வந்து சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சிலைகளை கரைக்க இன்று பாரதிய சிவசேனா அமைப்பினரும், நாளை இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள 4 இடங்களில் கடற்கரை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விநாயகர் ஊர்வலத்தின் போது எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை எடுத்து செல்ல போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லும் 26 வழித்தடங்களிலும், சென்னை காவல்துறை சார்பில் 16,500 காவலர்கள், 2 ஆயிரம் ஊர்க்காவல்படையினர், தாம்பரம் காவல்துறை சார்பில் 1,500 காவலர்கள், ஆவடி காவல் துறை சார்பில் 2,080 காவலர்கள் என மொத்தம் 22,080 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் மட்டுமே விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும்.சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் இணைக்கப்பட்ட கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சென்னை காவல் எல்லையில் 1,519 சிலைகளும், தாம்பரம் காவல் எல்லையில் 425 சிலைகள், ஆவடி காவல் எல்லையில் 204 சிலைகள் உட்பட மொத்தம் 2,148 சிலைகளை பட்டினப்பாக்கம், பல்கலை நகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்கள் மட்டுமே கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை முழுவதிலும் இருந்து கொண்டு வரப்படும் சிலைகளை கன்வேயர் பெல்ட், கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சிலைகள் கரைக்கும் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர்கள் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மற்றும் வாகனம் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் வழித்தடங்கள் மற்றும் கரைக்கும் இடங்கள் : சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சௌகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்.ஜி.ஆர் நகர், வடபழனி, சைதாப்பேட்டை வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்கள் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* இதே போல, அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர் மற்றும் மாதவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் 1.2 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக திருவாரூர், முத்துப்பேட்டை, கோவை, நெல்லை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

The post இன்றும், நாளையும் விநாயகர் ஊர்வலம்; தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு: சென்னை, தாம்பரம், ஆவடியில் 2,148 விநாயகர் சிலைகள் இன்று முதல் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Tamil Nadu ,Chennai, Tambaram ,Avadi ,Chennai ,
× RELATED திருப்போரூர் பகுதியில் இயங்கும்...