×

குன்னூரில் 6 கடைகளில் 30 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்

*உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

ஊட்டி : குன்னூர் நகரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு 6 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 30 கிலோ பழைய கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார். மேலும், சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலும் தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இது போன்ற காலாவாதியான கோழி இறைச்சி மற்றும் உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் சில ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் புகார் சென்றுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமையில் குன்னூரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, பெட்போர்டு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகள் என 20க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ே்சாதனை மேற்கொண்டனர்.

அப்போது, 6 கடைகளில் 30 கிலோ பழைய கோழி இறைச்சி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர். மேலும், அந்த கடைக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், குன்னூர் பகுதியில் கலப்பட தேயிலை தூள் டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். மேலும், தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பனை செய்பனை செய்வது தெரிய வந்தது. அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இது குறித்து உணவுத்துறை அதிகாரி சுரேஷ் கூறுகையில்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறோம். சோதனையின் போது, காலாவதியான உணவு பொருட்கள், கோழி இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவு பொருட்கள் வைத்திருந்தால், அவை பறிமுதல் செய்து அழிக்கப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பனை செய்யும் கடைகளும் கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், கலப்பட தேயிலை தூள் பயன்படுத்தும் கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அனைத்து ஓட்டல் உரிமையாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

The post குன்னூரில் 6 கடைகளில் 30 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Food Security ,Food Security Department ,Kunnur Nagar ,Dinakaran ,