×

வெற்றியை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பேச்சு

 

காரைக்குடி, செப். 23: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் வடிவாம்பாள் வரவேற்றார். கல்வி குழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சொ.சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், ‘‘ஒவ்வொரு மாணவர்களிடமும் திறமைகள் உள்ளன. அதனை வெளிக்கொண்டு வருவது பெற்றோர், ஆசிரியர்களின் பொறுப்பு. இப்பள்ளியை பொறுத்தவரை மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை கண்டறிந்து, அதனை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

6ம் வகுப்பு படிக்கும் தானேஷ்ராஜ் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் மாவட்ட, மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொண்டு இரு வெவ்வேறு போட்டிகளில் 2, 3ம் பரிசு பெற்றுள்ளது பாராட்டக்கூடியது. மாணவர்களை பாராட்டும் போது தான், மேலும் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வளரும். அந்தவகையில், இப்பள்ளி சாதனையாளர்களை பாராட்ட என்றும் தவறியதில்லை.

மற்றவர்கள் முன் பாராட்டப்படும்போது, மாணவர்களுக்கு தங்களுக்குள் ஏற்படும் எழுச்சியை வாழ்க்கையின் வெற்றியை நோக்கி செல்லும் பயணமாக மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களின் வெற்றி பயணத்தை தொடர தொடர்ந்து உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சாதனை படைக்க வேண்டும்’’ என்றார். பயிற்சியாளர் வைத்திஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வெற்றியை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Karakyudi ,Amravathipudur Sri Rajarajan CBSE School ,Karaikudi ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்