×

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5வது நாள் பிரமோற்சவம் கருட சேவையில் 3 லட்சம் பக்தர்கள் திரண்டனர்: விண்ணதிர பக்தர்கள் ‘கோவிந்தா’ என பக்தி முழக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தில் முக்கிய விழாவான கருட சேவையில் 3 லட்சம் பக்தர்களின் வெள்ளத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி முழக்கம் விண்ணை பிளந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கி சின்ன சேஷ வாகனம், அன்னம், சிம்ம, முத்து பந்தல், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.

பிரமோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று காலை பாற்கடலில் மந்தாரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்து எடுத்து அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு பெண் வேடத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார். இந்த அவதாரத்தில் நேற்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் மாய மோகத்தை போக்கும் விதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் நாச்சியர் திருகோலத்தில் உள்ள தனது உருவத்தை கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் கிருஷ்ணரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் மலையப்ப சுவாமி தங்க, வைர, பச்சை, மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணை பிளக்கும் வகையில் பக்தி முழக்கமிட்டனர்.

கருட சேவையை தரிசிக்க நேற்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்தது. திருமலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் நிரம்பியுள்ளனர். வீதிஉலாவில் முன்னதாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகளும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து பக்தர்கள் வீதிஉலாவாக வந்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் 5வது நாள் பிரமோற்சவம் கருட சேவையில் 3 லட்சம் பக்தர்கள் திரண்டனர்: விண்ணதிர பக்தர்கள் ‘கோவிந்தா’ என பக்தி முழக்கம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Eyumalayan Temple ,Pramotsavam Garuda Seva ,Vinnathira ,Tirumala ,Garuda ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்