×

தொகுதிப்பங்கீடு குறித்து விரைவில் முடிவு பாஜ – மஜத கூட்டணி உறுதி: அமித்ஷா, நட்டாவை சந்தித்த பின் குமாரசாமி தகவல்

பெங்களூரு: டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து, மஜத தலைவர் குமாரசாமி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் குமாரசாமியுடன் அவரது மகன் நிகில் குமாரசாமி, முன்னாள் ராஜ்ய சபா எம்பி குபேந்திரா ரெட்டி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். பாஜ – மஜத கூட்டணி குறித்த முதற்கட்ட கூட்டம் நேற்று நடந்த நிலையில், இனிமேல் பாஜ – மஜத கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தும் பாஜ மேலிட பொறுப்பாளராக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணி குறித்த அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதன் விவரங்களை கோவா முதல்வர் பிரமோத் பாஜ மேலிடத்திற்கு தெரியப்படுத்துவார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எச்.டி.குமாரசாமி, பாஜ – மஜத கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினோம். ஒரே கூட்டத்தில் கூட்டணி குறித்த அனைத்து விஷயங்களையும் பேசி முடிவு காண முடியாது. பாஜ – மஜத கூட்டணி உறுதி. அடுத்தடுத்த கூட்டங்களில் தொகுதிப்பங்கீடு குறித்த விஷயங்கள் முடிவு செய்யப்படும். எத்தனை தொகுதிகளில் நாங்கள் ஜெயிப்போம் என்பதெல்லாம் இப்போது முக்கியமில்லை.

மாநிலத்தின் 28 மக்களவை தொகுதிகளிலும் ஜெயிப்பதுதான் இலக்கு. பாஜ – மஜத கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எங்கள் தரப்பிலிருந்து எந்த கோரிக்கையும் இல்லை என்றார்.
இதுதொடர்பாக டிவிட் செய்த பாஜ தேசிய தலைவர் நட்டா, கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான எச்.டி.குமாரசாமியை, உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் சந்தித்தேன். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது என மஜத எடுத்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மஜத-வை மனதார வரவேற்கிறேன். மஜத இணைந்தது கூட்டணிக்கு பலம் சேர்த்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

The post தொகுதிப்பங்கீடு குறித்து விரைவில் முடிவு பாஜ – மஜத கூட்டணி உறுதி: அமித்ஷா, நட்டாவை சந்தித்த பின் குமாரசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,MJD ,Kumaraswamy ,Amit Shah ,Natta ,Bengaluru ,Delhi ,Home Minister ,National ,President ,Majad ,
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...