டயட் சாம்பார்
தேவையானவை
துவரம்பருப்பு அரை கப்,
ஏதேனும் ஒரு வகை காய், ஒரு கப்,
நறுக்கிய வெங்காயம் 1,
தக்காளி 2,
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்,
புளி 50 கிராம்,
மஞ்சள்தூள்,
பெருங்காயத்தூள்,
கடுகு,
வெந்தயம்,
சீரகம் தலா கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.
செய்முறை
குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வெந்த பருப்புடன் நறுக்கிய காய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக்கரைசல், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும்.வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரியவிட்டு, சாம்பாரில் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால்… டயட் சாம்பார் ரெடி!
செட்டிநாட்டு பருப்புத் துவையல்
தேவையானவை
துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு கால் கப்,
காய்ந்த மிளகாய் 2,
புளி கொட்டைப்பாக்களவு,
தேங்காய்த் துருவல் ஒரு டீஸ்பூன்,
பூண்டு 2 பல்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை
வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய்த் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசியாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டுப் பருப்புத் துவையல் ரெடி!
கீரை மசியல்
தேவையானவை
அரைக்கீரை ஒரு கட்டு,
சின்ன வெங்காயம் 5,
பச்சை மிளகாய் 1,
பூண்டு 5 பல்,
சீரகம் அரை டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை
கீரையை ஆய்ந்து, தண்ணீரில் அலசி சுத்தம் செய்துகொள்ளவும். ஆய்ந்த கீரையுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், திறந்து நன்கு மசித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வேகவைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் சேர்த்துக் கலந்தும் பரிமாறலாம். இதேபோல் முளைக்கீரை, சிறுகீரையிலும் செய்யலாம்.
மல்டி வெஜிடபிள் குழம்பு
தேவையானவை
நறுக்கிய பரங்கிக்காய்,
கத்திரிக்காய்,
அவரை,
காராமணி,
மொச்சை,
வாழை,
முருங்கைக்காய் கலவை 2 கப்,
வேக வைத்த துவரம்பருப்பு கால் கப்,
சின்ன வெங்காயம் 15,
பூண்டு 8 பல்,
புளி 50 கிராம்,
தக்காளி 4,
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,
கடுகு,
சீரகம்,
சோம்பு தலா கால் டீஸ்பூன்,
வெந்தயம் அரை டீஸ்பூன்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.
செய்முறை
சின்ன வெங்காயம், பூண்டை தோலுரித்து, நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டவும். பிறகு புளிக் கரைசலை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, நறுக்கிய காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
வெறும் கடாயில் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுத்து, குழம்பில் சேர்க்கவும். வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
பருப்பு ரசம்
தேவையானவை
துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் ஒரு கப்,
புளிக்கரைசல் கால் கப்,
தக்காளி 2,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
கடுகு வெந்தயம் தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.
பொடிக்க:
மிளகு,
சீரகம் தலா ஒன்றரை டீஸ்பூன்,
துவரம்பருப்பு 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2, பூண்டு 3 பல்.
செய்முறை
பாத்திரத்தில் துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர், புளிக்கரைசல், பெருங்காயத்தூள், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு பொடிக்கவும். வெறும் கடாயை மிதமான தீயில் வைத்து கடுகு, வெந்தயம் சேர்த்து சிவக்கப் பொரித்து, துவரம்பருப்புத் தண்ணீர் கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது, பொடித்த பொடியையும் சேர்க்கவும். கூடவே, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
அவல்தோசை
தேவையானவை
பச்சரிசி ஒன்றரை கப், புழுங்கல் அரிசி, அவல் தலா அரை கப், உளுந்து கால் கப், வெந்தயம் அரை டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை
பச்சரி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்கவும். அவலை தனியாக ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், எல்லாவற்றையும் ஒன்றாக்கி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க விடவும். புளித்ததும், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து, ஒரு கரண்டி மாவு விட்டு, ஊத்தப்பம் போல் வார்த்து மூடியால் மூடவும். வெந்ததும், திருப்பிப் போடாமல் அப்படியே எடுக்க, அவல்தோசை ரெடி! இதேபோல் ஒவ்வொரு அவல்தோசையும் தயார் செய்யவும்.
The post சுவையான ரெசிபிகள் appeared first on Dinakaran.
