×

கடலை எண்ணெய்… நாட்டுச்சர்க்கரை…

ஆரோக்கியம் காக்கும் ஆப்பக்கடை!

மயிலாப்பூர் சிட்டி சென்டருக்கு பின்புறம் அமைந்திருக்கும் திருவல்லிக்கேணி விபி ராமன் சாலை தினமும் மாலையில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. சிறிய அளவிலான ஓட்டல்கள், தேநீர்க் கடைகள், பழக்கடைகள் என பல கடைகள் இயங்கிவருகின்றன. இவற்றுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெகு அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஓம் குழி பணியாரக்கடை. வீட்டின் முன், சாலையை ஒட்டினாற்போல் சிறிய அளவு இடம்தான். அதில் அடுப்பு, பாத்திரம் சகிதமாக பணியாரம், ஆப்பம் சுட்டு விற்பனை செய்கிறார்கள் பாஸ்கர் – சங்கீதா தம்பதியினர். மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிந்துவிடுகிறது இந்தக்கடை. சாதாரண தொழிலாளிகள் முதல் அந்தப் பகுதியில் வசிக்கும் ஆசிரியர்கள், பொறியாளர்கள் என பல தரப்பினரும் இங்கு வந்து பணியாரம், ஆப்பத்தை வாங்கிச் சென்று சுவைக்கிறார்கள். ஒரு மாலைப்பொழுதில் பாஸ்கர் – சங்கீதா தம்பதியினரைச் சந்தித்துப் பேசினோம்.“எனக்கு இந்த ஏரியாதாங்க பூர்வீகம். நல்லா டிரம்ஸ் வாசிப்பேன். 2017-2018 வரைக்கும் ஆர்க்கெஸ்ட்ரா தொழில் நல்லா போச்சு. பல இடங்கள்ல கச்சேரி நடக்கும். கோயில் திருவிழா, திருமண விழான்னு பிசியா இருப்போம்.

டீஜே வந்தபிறகு எங்களுக்கு வேலை குறைய ஆரம்பிச்சுது. கொரோனா சமயத்துல ஒன்னுமே பண்ண முடியல. கொரோனா வந்துட்டு போன பிறகும் கச்சேரி கிடைக்கிறது கஷ்டமா இருந்துச்சி. நாம ஏதாவது தொழில் பண்ணாதான் சரியா வரும்னு தோணுச்சி. அப்ப என் மனைவி சங்கீதா கூட ஆலோசனை பண்ணேன். நாங்க வள்ளலாரை வழிபடுறோம். அசைவம் சாப்பிட மாட்டோம். அது சார்ந்த தொழிலும் செய்ய மாட்டோம். என்ன பண்ணலாம்னு யோசிச்சிப்ப பணியாரம் செஞ்சி வியாபாரம் பண்ணலாம்னு முடிவு பண்ேணாம். அதுவும் எந்த கலப்படமும் இல்லாம செய்யணும்னு தெளிவா இருந்தோம்.அதன்படி 2021ல இந்தக் கடைய ஆரம்பிச்சோம். இங்க பணியாரத்துல இனிப்புப் பணியாரம், காரப் பணியாரம் ரெண்டும் செய்யுறோம். ஆப்பமும் செய்றோம். லாபத்துக்காக கண்ட பொருட்களை கலக்குறது இல்ல. பணியாரத்துல பாமாயில், டால்டா, வெள்ளை சர்க்கரை, கலர் பவுடர், சோடா மாவுன்னு எதுவும் சேர்க்க மாட்டோம். இனிப்புப் பணியாரத்துக்கு நாட்டுச் சர்க்கரை, நெய், மரச்செக்கு கடலை எண்ணெய், பச்சரிசி மாவு, தேங்காய், சீரகம், ஏலக்காய், சுக்கு, எள்ளுனு பல பொருட்களைப் பயன்படுத்துறோம். இந்தக் கலவையை 6 மணி நேரம் ஊற வச்சி சாயங்காலம் பணியாரம் செய்றோம்.

இந்த மாவை நாங்க மறுநாளுக்கு பயன்படுத்துறது கிடையாது. 6 மணி நேரம் ஊறுறதால மிதமா புளிப்பு சுவையோட பணியாரம் ருசியா இருக்கும். இதை வெறும் பணியாரமாவே சாப்பிடலாம். காரப் பணியாரத்துக்கு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய், கேரட், இட்லி மாவு பயன்படுத்துறோம். இட்லி மாவுல மசாலா சேர்ப்போம். இந்த மாவும் ஒரே நாள்ல காலி ஆயிடும். கொஞ்சமா மீந்துச்சுன்னா மறுநாள் அரைக்கிற மாவுகூட சேர்த்து பயன்படுத்துவோம். அது நல்ல ருசியா இருக்கும். மாவுல மசாலா கலந்துட்டா அதை மறுநாளுக்கு பயன்படுத்த மாட்டோம். காரப் பணியாரத்திற்கு தேங்காய் சட்னி, காரச் சட்னி ரெண்டு வித சட்னி தரோம். அதுவும் வாழையில வச்சி பணியாரத்தை தரோம். சட்னியை நல்ல பொருட்களைப் போட்டு தரமானதா கொடுக்குறோம்” என்றார் பாஸ்கர். அவரைத் தொடர்ந்து சங்கீதா பேச ஆரம்பித்தார்.“ ஆப்பம்னாலே பல பேரு சோடா உப்பு போட்டு செய்வாங்க. நாங்க சோடா மாவை சேர்க்கறதே இல்ல. ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய் அல்லது இளநீர் தண்ணிய சேர்ப்போம். அது மாவைப் புளிக்க வச்சி நல்ல ருசியைக் கொடுக்குது. ஆப்பம் நல்லா மிருதுவா, ருசியா இருக்கும்.

ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால், கறுப்புக்கடலை குருமான்னு ரெண்டும் தரோம். சிலர் தேங்காய்ப்பாலை விரும்பி வாங்கி சாப்பிடுவாங்க. சிலர் கறுப்புக்கடலை குருமாவை விரும்பி வாங்கி சாப்பிடுவாங்க. நான் ப்ளஸ் 2 முடிச்சிட்டு, டீச்சர் ட்ரெயினிங் படிச்சிருக்கேன். அவரு இசைக்கலைஞரா இருக்காரு. எங்க பொண்ணு சாதனா 9வது படிக்குது. பையன் சித்தார்த் 6வது படிக்கிறான். எங்க குடும்பத்துக்கு இந்த ஆப்பமும், பணியாரமும்தான் சோறு போடுது. நாங்க கலப்படம் எதுவும் செய்யாம செக்கு எண்ணெய்ல, நல்ல பொருட்களை வச்சி ஆப்பம், பணியாரம் செய்றோம். இங்க சாப்பிட வரவங்க, ஆரம்பத்துல விலை அதிகமா இருக்கேன்னு சொன்னாங்க. இங்க கிடைக்குற ருசி, ஆரோக்கியத்தை உணர்ந்து எல்லோரும் புரிஞ்சிக்கிட்டாங்க. இப்ப பல பேரு இந்தக் கடையோட ரெகுலர் கஸ்டமராவே ஆயிட்டாங்க. பசங்களுக்கு மாலை நேரத்துல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுப்போம்னு வாங்கிட்டு போறாங்க. இதனால நாங்க இதே தரத்தோடதான் தரணும்னு உறுதியா இருக்கோம்’’ என ஆணித்தரமாக பேசுகிறார் சங்கீதா.

அ.உ.வீரமணி
படங்கள்: அருண்

The post கடலை எண்ணெய்… நாட்டுச்சர்க்கரை… appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni VP Raman Road ,Mylapore City Center ,Natucharkarai ,Dinakaran ,
× RELATED கவுந்தப்பாடி ஒழுங்குமுறை...