×

வாழ்வை மலர்விக்கும் ஆதிசக்தியின் அற்புத நாமம்

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 17

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

சம்பகா சோக புன்னாக ஸௌகந்திக லஸத்கசா இதற்கு முந்தைய நாமமான நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் பிரமாண்ட மண்டலா என்கிற நாமத்தில் அம்பிகையின் நிர்குண சொரூபத்தை தரிசித்தோம். அதாவது அண்டம், பேரண்டம், அகிலாண்டம் என்று எல்லையில்லாத வஸ்துவாக அம்பாளே பரவியிருக்கின்றாள் என்று பார்த்தோம். இந்த பிரம்மாண்டத்தை மனதால் கற்பனை கூட செய்ய முடியாது. பிரம்மம் இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது என்று வாக்கால் சொல்லமுடியாது.

இப்போது அதே அம்பிகை சிதாக்னி குண்டத்திலிருந்து எழுந்த அம்பிகையை உணர ஆரம்பிப்பதற்கு உபாசனை வேண்டும். ஒரு ஜீவனுக்குள் ஆத்மா என்கிற அம்பிகை எப்போதும் இருந்தபடியே இருக்கின்றாள். சென்ற நாமங்களில் அம்பாளை மனதைத் தாண்டியிருக்கும் சத்திய வஸ்துவாகவே பார்த்துக் கொண்டு வந்தோம். இப்போது அந்த அம்பிகையை உபாசிக்கும் பொருட்டு ஒரு உருவமாக இனிமேல் பார்க்கப் போகிறோம். ஏனெனில், நிர்குணமாக இந்த மனதிற்கு பார்க்க தெரியாது. அதாவது உருவமற்ற மனதினால் பிடிக்க முடியாத, மனதின் அளவீடுகளுக்கு அப்பால் உள்ளதை புரிந்து கொள்ள இயலாது.

கொஞ்சம் சகுணமாக அதாவது உருவத்தில் கொண்டுபோய் மனதை நிறுத்த கேசம் முதல் பாதம் வரை அம்பிகையை வருகின்ற நாமங்கள் வர்ணிக்கப் போகின்றன. இந்த ஞான சாதனையில் உபாசனை முக்கியமானது. இந்த உபாசனையின் முக்கிய சாதனங்களே பக்தி, கர்ம, யோகம், ஞானம் போன்றவை விளங்குகின்றன. இப்படி அம்பிகையை நோக்கி ஒரு ஜீவன் நகரும் பாதையில் உபாசிக்க ஒரு சகுண ரூபம் தேவைப்படுகின்றது. அதாவது மனதிற்கு நெருக்கமாக புரிந்து கொண்டு பக்தி செய்வதற்கு ரூபம் தேவைப்படுகின்றது. அது துவைதமான உருவமும் கிடையாது.

நம்முடைய ஆத்ம சொரூபத்தை நாம் அந்த உருவில் பார்க்கின்றோம். நாம் நம்மை உருவமாகக் கொண்டுள்ள வரையில், உருவமாக நினைக்கின்ற வரையில் அருவுருவான இன்னதென்று அறியமுடியாத ஒன்றை எப்படி உபாசிப்பது. எனவே, நம்முடைய அறிதலின் நிலைக்கு அம்பிகை இங்கு இறங்கி வருகின்றாள். இதையே சகுண மூர்த்தி என்பார்கள். அப்படிப்பட்ட அம்பிகையின் சகுண மூர்த்தியின் உருவ வர்ணனையைத்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.

இப்போது இந்த நாமத்தைப் பார்ப்போம். சம்பகா சோக புன்னாக ஸௌகந்தி கலஸத் கசா… அம்பிகை சிதக்னி குண்டத்திலிருந்து ஆவிர்பவிக்கின்றாள். அப்படி சிதக்னி குண்டத்திலிருந்து வரும்போது முதலில் தேவர்கள் பார்த்தது அம்பிகையின் அந்த கேசத்தைத்தான். கேச பாரத்தைத்தான். முதலில் முடிதான் தெரிகின்றது. அதில் அம்பிகை எதைச் சூடியிருக்கின்றாள் எனில், சம்பகம் (செண்பகம்), அசோகம் (மருதாணி), புன்னை, செங்கழுநீர் பூ என்று நான்கு மலர்களை சூடியிருக்கின்றாள்.

ஏன் இங்கு கேசத்தை சொல்கிறார்கள் எனில், நம்முடைய உறுப்புகளில் கேசத்தைத் தாண்டி வேறொரு உறுப்பு கிடையாது. அதுதான் மேலே இருக்கக் கூடியது. இந்த கேசம் என்பது நமது நெற்றியையும் சஹஸ்ராரத்தையும் இணைக்கக் கூடியது. யோக மார்க்கத்தில் சொல்வதென்றால் நமது ஆக்ஞா சக்கரத்தையும் சஹஸ்ராரத்தையும் இணைக்கக் கூடிய இடமான பிரம்ம ரந்திரப்பகுதிதான் இந்தக் கேசம்.

இப்போது சகுண மூர்த்தியாக பார்த்தாலும்கூட யோக மார்க்கத்தில் நம்முடைய பிரம்ம ரந்திரத்தை குறிக்கக் கூடியது. இப்போது இதில் சூடியுள்ள பூக்களில் முதல் மலரான செண்பகப் பூவை எடுத்துக் கொள்வோம். இப்போது ஆத்ம தரிசனம் நிகழ்கின்றது அதில் முதலில் இந்த கேசத்தை அம்பிகையின் கேசத்தை முதலில் பார்க்கின்றான். இங்கு பார்ப்பது என்பது அவன் உள்ளுக்குள் தோன்றும் தரிசனத்தில் தெறிப்பு. இந்த செண்பகத்தை பார்க்கும்போது அவனுக்குள் பெரும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் தோன்றுகின்றன. இந்த ஆனந்தம் இதுவரையில் ஜீவன் அனுபவித்த சிற்றின்பம் அல்ல. சிறுசிறு சந்தோஷமாக அல்ல.

ஏனெனில், இங்கு மனிதர்கள் சந்தோஷத்தை அனுபவிக்கும்போது கூடவே வலியும் சேர்ந்தே வரும். இந்த சந்தோஷம் நீங்கி விடுமோ என்று வலியும் சேர்ந்து கொள்ளும். சம்பகம் என்றால் மகிழ்ச்சி. இப்போது இதற்கு அடுத்த நாமமே இந்த மகிழ்ச்சி வலியோடு இல்லை என்பதை நிரூபிப்பதுபோல் வருகின்றது. அதாவது அசோகம். சோகம் என்பது வருத்தம், வலியுணர்வை குறிப்பது. ஆனால், அசோகம் எனில் சோகக் கலப்பே இல்லாத ஆனந்தம். புன்னாக மலர் என்பதின் அர்த்தம் பாவ புண்ணியங்களினால் வரும் ஆனந்தமும் அன்று. அதாவது கர்மாவை அனுபவிக்கும்போது ஏற்படும் மகிழ்வும் அல்ல. இப்போது நாம் இருக்கும் உலகில் பிராரப்த பிராகாரம் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் வந்துவந்து செல்கின்றது. ஆனால், புன்னாகம் என்பதில் வரும் சந்தோஷம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.

அடுத்ததாக சௌகந்தி என்பது குறிப்பிடுவது என்னவெனில், இந்த ஜீவன் தான் அனுபவித்த இந்த பேரின்பமானது இவனிலிருந்து எல்லோருக்கும் சென்று அவர்களை அணைத்துக் கொள்ளும். தெறித்துப் பரவும் ஒளியைப் போன்றது. இவனை மட்டுமல்லாது சுற்றியுள்ளோரை ஜொலிக்க வைப்பது. (radiance and fragrance). இவனிலிருந்து பெருகும் மணம் கொண்டது. மிகச் சரியாகச் சொல்லப்போனால் ஒரு பெரிய ஞானி அமர்ந்திருக்கிறார் எனில் அவரின் சாந்நித்தியமே அந்த மகிழ்ச்சியைத் தரும். அதாவது அம்பிகையின் கேசத்திலுள்ள நான்கு மலர்கள் தரும் சந்தோஷத்தைத் தரும். அது இவ்வுலகில் மனம் உணரும் வகையில் இருப்பதல்ல.

சம்பகம் என்பது அம்பிகையின் தரிசனத்தால் கிடைக்கக்கூடிய ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் சோகம் கிடையாது. அசோகம். அந்த ஆனந்தம் என்பது பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டது. அதுவே புன்னாகம். அந்த ஆனந்தத்தை அடையும்போது நம்மை அறியாமல் மற்றவர்களுக்கும் பரவும். இதுவே இந்த நான்கு மலர்களும் உணர்த்தும் தத்துவம். இந்த நான்கு மலர்களைத்தான் அம்பிகை கேச பாரத்தில் சூடியிருக்கின்றாள்.

நாமம் சொல்லும் கோயில்

இங்கு அம்பிகையின் பெயர் சுகந்த குந்தளாம்பிகை. பெயரே மலரின் மணம் கொண்டது. திருவேடகம் ஏகடநாதேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சம்பந்தர் ஆற்றிலிட்ட தலம் எதிரேறிக் கரையடைந்தது என்பது தொன்நம்பிக்கை. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஏடகநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஏடகநாதேஸ்வரர், சுகந்த குந்தளாம்பிகை, தாயார் ஏலவார்குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வமரமும், தலத்தின் தீர்த்தமாக பிரம தீர்த்தக்குளம் மற்றும் வைகை ஆறு ஆகியவை உள்ளன.

திருஞானசம்பந்தர் எழுதிய ‘வாழ்க அந்தணர்’ என்ற திருப்பதிகம் எழுதிய ஓலை வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து கரையை அடைந்த தலம். மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அனல் வாதம் புனல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்டபோது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால், சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டைத் தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின்போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டபோது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் ‘‘வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது.

The post வாழ்வை மலர்விக்கும் ஆதிசக்தியின் அற்புத நாமம் appeared first on Dinakaran.

Tags : Aadi Shaktiya ,Adi Shakti ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி