×

பாஜவுக்கும், எங்களுக்கும் பிரச்னையில்லை அண்ணாமலையைதான் நாங்கள் எதிர்க்கிறோம்: செல்லூர் ராஜூ திடீர் பல்டி

மதுரை: ‘பாஜவுக்கு எங்களுக்கும் எந்த பிரச்னையுமில்லை. அண்ணாமலையின் கருத்து, செயல்பாடுகளை தான் எதிர்க்கிறோம்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்து உள்ளார். மதுரை மாவட்ட பாஜ துணை தலைவர் ஜெயவேல். இவர் ஏற்கனவே அதிமுகவில் மாநகராட்சி மண்டலத் தலைவராக இருந்து, பாஜவில் சேர்ந்திருந்தார். பாஜவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் நேற்று மீண்டும் ஜெயவேல், அதிமுகவில் செல்லூர் ராஜூ முன்னிலையில் இணைந்தார்.

அப்போது செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜ உள்ளிட்ட கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அதிமுகவில் இணைய ஆர்வமாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைய இருக்கின்றனர். ஒரு போன் செய்தால் பாஜவினர் காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்து விடுவார் என பேசுவது தவறு. மானத்தை இழந்து, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிசாமி பாஜ காலில் விழ மாட்டார். பாஜவிற்கும் எங்களுக்கும் பிரச்னை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா? அண்ணாமலையின் கருத்து, செயல்பாடு இதைத்தான் எதிர்க்கிறோம். அண்ணாமலை சொன்ன விதம் தவறு என்றுதான் கூறினோம்.

ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். முத்துராமலிங்க தேவரை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம், எங்கள் கொள்கை அண்ணாயிசம். எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா ஆகியோர் பிரச்னை இல்லை. அவர்கள் அதிமுவையும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் நன்றாக மதிக்கின்றனர். அது எங்களுக்கு போதும். அண்ணாமலையை மட்டுமே நாங்கள் விமர்சிக்கிறோம்.
பாஜ தலைவரை நாங்கள் எப்படி மாற்ற சொல்ல முடியும். பாஜ உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. பாஜவுக்கு அதிமுக முட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மோடி தான் பிரதமராக வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் முதல்வராக எடப்பாடி பழனிசாமிதான் வரவேண்டும் என்று பாஜ அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜவுக்கும், எங்களுக்கும் பிரச்னையில்லை அண்ணாமலையைதான் நாங்கள் எதிர்க்கிறோம்: செல்லூர் ராஜூ திடீர் பல்டி appeared first on Dinakaran.

Tags : baja ,anamalai ,chellore ,raju ,Madurai ,Minister of State ,Selloor ,Raju Sudden Baldi ,
× RELATED 140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்