×

சூலூர் அருகே ஏடி காலனியில் 30 ஆண்டுகளுக்கு பின் வீடு, கோவில்களுக்கு மின் இணைப்பு

 

சூலூர், செப்.22: சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் ஏடி காலனி பகுதியில் உள்ள 10 வீடு, கோவில்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. அங்கிருந்த கோவில்களுக்கு 30 ஆண்டுகளாக மின் இணைப்பு தராமல் இருட்டில் இருந்தது. வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பத்து ஆண்டுகள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் கடும் சிரமத்தில் இருந்தனர். இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்தி ராஜேந்திரன் மூலமாக மின் இணைப்பு வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர். இதை பரிசீலித்த மாவட்ட கலெக்டர் மக்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், நேற்று ஏடி காலனியில் இருந்த 10 வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், அதே பகுதியில் 30 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருந்த 3 கோவில்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,“மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பத்து ஆண்டுகளாக காத்திருந்தோம். தமிழக முதல்வரின் கருணையால் உடனடியாக எங்களுக்கு மின் இணைப்பு கிடைத்துள்ளது இதற்காக முதல்வருக்கும், கலெக்டர், மின்துறை அமைச்சர், ஊராட்சி மன்ற தலைவர்.சாந்தி ராஜேந்திரன் துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி’’ என்றனர்.

The post சூலூர் அருகே ஏடி காலனியில் 30 ஆண்டுகளுக்கு பின் வீடு, கோவில்களுக்கு மின் இணைப்பு appeared first on Dinakaran.

Tags : AD Colony ,Sulur ,Appanayakkanpatti Budur ,Dinakaran ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது