×

நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையின்படி ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சிபிஐ பரிசீலிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இந்த நிலையில், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், அவரது மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஐந்து ஆண்டுகள் விசாரணைக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம் 2022 ஆகஸ்ட் 23ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனுவில், நீதிபதி ஆறுமுகச்சாமி அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், முழுமையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என்று தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

The post நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையின்படி ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சிபிஐ பரிசீலிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Judge ,Arumukasamy ,CPI ,J. ,Chennai High Court ,Chennai ,Arumukasamy Commission ,Chief Minister ,Jayalalithah ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...