×

ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்

திருவாரூர்: திருவாரூரில் இன்று பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கருகி வரும் குறுவை சாகுபடியை காப்பாற்ற, 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியை துவங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீரை திறக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள ராசிமணலில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தை ஒன்றிய அரசு முடக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை மறியல் போராட்டம் நடந்தது. ரயில் நிலையம் அருகே 150 மீட்டர் தொலைவில் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகளை ரயிலை சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 50 விவசாயிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தண்டவாளத்தின் நடுவே விவசாயிகள் படுத்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்ததும் திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் மற்றும் பொறுப்பாளர்கள் சுப்பையன், செந்தில்குமார், கிருஷ்ணமணி, பழனிவேல் உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் appeared first on Dinakaran.

Tags : Union ,Thiruvarur ,Pandeon ,Karuji ,Tamil Nadu ,Union Government ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...