×

ஜெயலலிதா, அண்ணாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை பெரியார் குறித்து அண்ணாமலை அவதூறு: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: ஜெயலலிதா, அண்ணாவை தொடர்ந்து, பெரியார் குறித்து அண்ணாமலை அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து தலையாட்டி பொம்மை போல் அக்கட்சி தலைவர்களை இயக்கி தங்களது காரியங்களை சாதித்து வருகிறது பாஜ. சர்ச்சைக்குரிய மசோதா, மாநில உரிமைகள் பறிப்பு, தேர்தல் சீட் என நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது பாஜ மேலிடம். தேர்தலின்போது சீட் கேட்டு பாஜ தேடி வந்த காலம் போய், பாஜவை தேடி சென்று தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய நிலைக்கு அதிமுகவுக்கு வந்துவிட்டது.

இவ்வாறு இறங்கி சென்றாலும், அதிமுக கேட்கிற தொகுதியை பாஜ தருவதில்லை. இதனால் அதிமுக-பாஜ இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் எப்போதும் பிரச்னை. தேர்தல் நேரங்களில் கூட்டணி விவகாரம் தொடர்பாக பேச்சு எடுக்கும்போதெல்லாம் அதிமுக-பாஜ தலைவர்கள் மோதிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. ஒரு வழியாக சீட்டை பிரித்து கொண்டாலும் இரு கட்சி தலைவர்களும் ஒன்றாக பிரசாரம் செய்வதில்லை. இதன் முடிவு தேர்தலில் படுதோல்வி. தோல்விக்கு யார் பொறுப்பு என்று இரு கட்சி தலைவர்களும் அடித்து கொள்வார்கள். மேலிடம் சிக்னல் காட்டியதும் சமரசம் அடைவார்கள்.

தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி வருகிறார். கொங்கு மண்டலத்தில் யார் பெரிய ஆள் என்பதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதில் எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்களை கடுமையாக தாக்கி பேசும் அண்ணாமலை, மறைந்த தலைவர்களையும் விட்டு வைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் பேசிய அண்ணாமலை, ‘ஜெயலலிதாதான் மிகப்பெரிய ஊழல் முதல்வர். என் மனைவி, ஜெயலலிதாவை விட மிகவும் வலிமையானவர்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பொங்கி எழுந்த அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு இல்லாமல், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும். இல்லையென்றால் கூட்டணி குறித்து எதிர் முடிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன்பிறகு டெல்லி பாஜ மேலிடம் டோஸ் விட்டதால் சற்று அமைதியாக இருந்த அண்ணாமலை, அண்ணாவைப் பற்றி அவதூறாக பேசியதால் மீண்டும் மோதல் தொடங்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்த அதிமுக மாஜி அமைச்சர்கள், ‘அண்ணாவைப்பற்றி அவதூறாக பேசுபவர்கள் நாக்கு வெட்டப்படும். மறைந்த தலைவர்கள் பற்றி இழிவாக பேசுவதா? அண்ணாமலை இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அண்ணாமலை வசூல் யாத்திரை நடத்துகிறார்.

இதுதான் அவருக்கு இறுதி எச்சரிக்கை’ என்று கடுமையாக சாடினர். இதற்கு பதிலடியாக பேட்டியளித்த அண்ணாமலை, அண்ணாவை பற்றி தவறாக நான் பேசவில்லை என கூறிவிட்டு, பெரியார் அடி வாங்கியதையும் சொல்ல முடியும் என்று அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஏற்கனவே பாஜவில் உள்ள எச்.ராஜா போன்ற தலைவர்கள் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறாக பேசி வரும் நிலையில், அண்ணாமலையும் தற்போது பேசி உள்ளதற்கு கட்சி பாகுபாடின்றி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

The post ஜெயலலிதா, அண்ணாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை பெரியார் குறித்து அண்ணாமலை அவதூறு: தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jayalalithah ,Anna ,Periyar ,Chennai ,Anamalai ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு