×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளர் விடுதலை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கடந்த 1991-96ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக பதவி வகித்த இந்திர குமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர் வெங்கடகிருஷ்ணன். இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து 2012ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில், சாதாரண பின்னணியைக் கொண்ட வெங்கடகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் வெளிநாட்டு கரன்சிகள், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது மனைவி மஞ்சுளாவுக்கு என்று தனிப்பட்ட எந்த வருவாய் ஆதாரம் இல்லை. இவற்றை கருத்தில் கொள்ளாமல் இருவரையும் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதற்கு வெங்கடகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர், சொத்துகளுக்கு உரிய விளக்கங்களை அளித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்த பிறகே சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் எந்த பிழையும் இல்லை என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஆவணங்களை ஆராய்ந்ததில், வெங்கடகிருஷ்ணனும், மஞ்சுளாவும் வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்துகள் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவே, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. தண்டனை விவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக செப்டம்பர் 19ம் தேதி (இன்று) வெங்கடகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளா ஆகியோர் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளர் விடுதலை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,India Kumary ,Minister of Social Welfare ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...