×

கூட்டணி இல்லை என்றதும் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்த தேசிய கட்சிக்கு தாவிய எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

“தேசிய கட்சிக்கு தாவியவர் கணக்கு தப்பா போகுது போல..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக் கட்சியின் நிலைப்பாடு அல்வா ஊரின் எம்எல்ஏக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அவர் இலை கட்சியில் இருந்து தேசிய கட்சிக்கு தாவியவர். இலை கட்சி ஆட்சியில் இருந்தபோது பவர்புல் துறைகளுக்கு அமைச்சராகவும் இருந்தார். ஆனால் மம்மியின் மறைவுக்குப் பிறகு அவர் இலை கட்சிக்கு கும்பிடு போட்டு விட்டு தேசிய கட்சியில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இலை கட்சி முதுகில் சவாரி செய்து அல்வா ஊரின் தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார். ஆனால் தேசிய கட்சியில் மாநில அரசியலில் இருந்தால் அதிகபட்சம் எம்எல்ஏ தான் ஆக முடியும் என்பதை உணர்ந்துள்ள அவர், தேசிய அரசியலுக்கு தாவி விடலாம் என திட்டம் போட்டுள்ளார். அதற்காக வருகிற மக்களவை தேர்தலில் அல்வா ஊரின் மக்களவை தொகுதியை குறி வைத்துள்ளார். எப்படியும் இலை கட்சி கூட்டணிதான் இருக்கும். கூட்டணி ஆதரவுடன் நாம் தேறி விடலாம் என்பது அவரது கனவு. ஆனால் தற்போது இலை கட்சி கூட்டணி டமால் என நேற்று தகவல் வெளியானது. இதனால் அல்வா ஊரின் எம்எல்ஏ ஏக அப்செட். கூட்டணிக்கு வேட்டு வந்தால் நாம் எப்படி தேற முடியும். நமது கனவு நனவாகுமா, தேசிய அரசியல் கணக்கு தப்பாகி விடுமோ என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புல்லட்சாமியை சுற்றி வரும் புரோக்கர்களால் பிரச்னை என்கிறார்களே… என்னா விஷயம்..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் புல்லட்சாமியை புரோக்கர்கள் சுற்றி வருவதாக முன்னாள் முதல்வர் நாசா அடிக்கடி குற்றம் சாட்டி வந்தார். இதற்கிடையே முதல்வரை சுற்றி வந்த ராமர் பெயரை கொண்ட ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியது அம்பலமானது. இவர் எப்போதும் முதல்வர் பின்னாடியே சுற்றி வந்தவர் என்பதால், இந்த விவகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் யார், இவருக்கு முதல்வர் அலுவலகத்தில் அப்படி என்னதான் வேலை என எல்லோரும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டனர்.புல்லட்சாமி முன்பு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் இருக்கையில் அமர மாட்டார்கள். அதே நேரத்தில் இந்த ராமர் மட்டும் புல்லட்சாமிக்கு எல்லாமே நான்தான் என அமைச்சர்களுக்கே கெத்து காட்டினாராம். ராமின் இந்த நடவடிக்கை பல எம்எல்ஏக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. காவல்துறையிடம் ராம் சிக்கியதால், ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்து எம்எல்ஏகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதானாம். ஆனால் இதனை உடனே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் சபாநாயகரை சந்தித்த எம்எல்ஏக்கள், சட்டமன்றத்துக்குள் புரோக்கர்களை அனுமதிக்க கூடாது. முதல்வரிடம் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டு, நில அபகரிப்பு, கட்டபஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் எம்எல்ஏக்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறினர். அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் சாமி, முதல்வர் அலுவலகம் பற்றிய குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்றார். இது புல்லட்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பெண் காவலரிடம் அறை வாங்கினாராமே தலைமை காவலர்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட திருவிக நகர் காவல் நிலையத்தில் ஆண் தலைமை காவலர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் இருக்கும் போது யாரும் இல்லாத நேரமாக பார்த்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரின் கன்னத்தை செல்லமாக கிள்ளி பார்த்துள்ளார். இதனால அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் தலைமை காவலரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத தலைமை காவலர் உடனடியாக காவல் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். சில நாட்களாகவே அந்த பெண் காவலரின் மீது தலைமை காவலரின் பார்வை தவறான கண்ணோட்டத்தில் இருந்துள்ளது. இதை தனது தோழிகளிடம் சொல்லி பெண் காவலர் வருத்தப்பட்டாராம்.. குறிப்பிட்ட அந்த தலைமை காவலர் சென்னையையே கதிகலங்க வைத்த திரு.வி.க. நகர் நகைக் கடை கொள்ளை வழக்கில் கைதான பிரபல திருடனின் மனைவி சிறையில் இருந்து வெளியே வந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும்போது அந்த பெண்ணிற்கும் ரூட்டு போட்டு உள்ளார். ஆனால் அது கைகூடவில்லை என சக காவலர்கள் பேசிக் கொள்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் சிக்கும் தலைமை காவலர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவிக நகர் போலீசார் முணுமுணுத்து வருகின்றனர்’’ என முடித்தார் விக்கியானந்தா.

The post கூட்டணி இல்லை என்றதும் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்த தேசிய கட்சிக்கு தாவிய எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : MLA ,National Party ,wiki Yananda ,Uncle ,Peter ,Leaf Party ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...