×

அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்க சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்ட முயற்சி: வைகோ கடும் கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலம் சட்டமூணார் பகுதியிலுள்ள பாம்பாறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர். அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள மாநில அரசு தடுப்பு அணை கட்ட முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு சொட்டு நீர் கூட வருவதற்கு வாய்ப்பில்லை. தமிழக அரசின் அனுமதியோ, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியோ இன்றி தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தில் சட்ட விரோதமாக கேரள மாநில அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்.

The post அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்க சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்ட முயற்சி: வைகோ கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Spider River ,Amaravati Dam ,VAICO ,CHENNAI ,Madhyamik General Secretary ,Vaiko ,Tirupur district ,Udumalai ,Tirupur ,Karur ,Dinakaran ,
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு...