* போலீஸ் வாகனங்களில் வந்து ஸ்டைலாக இறங்கி
திருமலை: தற்போதைய நவீன யுகத்தில் திருமணத்துக்கு முன்பு போட்டோ ஷூட் நடத்துவது பேஷன் ஆகிவிட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்களை கவர இதுபோன்று நடத்துகின்றனர். பல நேரங்களில் ரிஸ்க் எடுத்தும், சர்ச்சைக்குரிய வகையிலும் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதேபோல், தெலங்கானாவில் எஸ்ஐ தம்பதியினர் போலீஸ் சீருடையில், ஜீப்பில் சென்று திருமண ஷூட் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத் பகுதியில் ஆயுதப்படை எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ரவுரி கிஷோர். ஐதராபாத்தை அடுத்த பஞ்சாகுண்டா காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் பாவனா. இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்தின்பேரில் கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இதற்காக பூங்காக்கள், கோயில்கள், மலைப்பகுதி, பசுமை போர்த்திய விவசாய நிலங்கள் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினர். அப்போது, சினிமாவை மிஞ்சும் வகையில் படப்பிடிப்பின் ஆரம்பத்திலேயே 3 சிங்கங்களை காண்பித்தும், போலீஸ் சீருடையில் போலீஸ் வாகனங்களில் இருந்து ஸ்டைலாக இறங்குவது போலவும், காவல் நிலைய வளாகத்திலும் படப்பிடிப்பு நடத்தினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காவல் துறையில் பணியாற்றும் எஸ்ஐ தம்பதி திருமணத்துக்கு போலீஸ் சீருடையில் வீடியோ எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநில போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post காவல் நிலையத்தில் சீருடையில் எஸ்ஐ தம்பதி போட்டோ ஷூட்: திருமணமான ஒரு வாரத்தில் `அட்ராசிட்டி’ appeared first on Dinakaran.
