×

கோயில் நிலங்களுக்கு விரைவில் வாடகை நிர்ணயம்: அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: கோயில் நிலங்களின் வாடகை நிர்ணயத்தை சீர்படுத்திட தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாடகை நிர்ணயம் செய்வது குறித்து முழுமையான சாதக, பாதகங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது. வெகு விரைவில் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பேயாழ்வார் திருக்கோயிலில் ரூ.3 கோடியில் கருங்கல் முன் மண்டபம், மடப்பள்ளி, அலுவலகக் கட்டிடம் மற்றும் கோயில் முழுவதும் புனரமைத்து வர்ணம் பூசும் திருப்பணிகளையும், திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர் கோயிலில் ரூ.72.80 லட்சத்தில் புதிய மரத்தேர் உருவாக்கும் திருப்பணியினையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்குஅளித்த பேட்டி:
மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள், மயூரநாத சுவாமி மற்றும் பேயாழ்வார் அவதரித்த இத்தலத்திற்கு கடந்த 2004ம் ஆண்டு நன்னீராட்டு விழா நடைபெற்றது. 19ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கு இன்று திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்தப்படும். அதேபோல திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட மரத்தேர் பழுதடைந்ததால் கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்த கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் இத்திருக்கோயிலுக்கு ரூ.72.80 லட்சம்த்தில் புதிய மரத்தேர் உருவாக்கும் திருப்பணியினையும் இன்றைக்கு தொடங்கி வைத்துள்ளோம். ஆறு மாத காலத்திற்குள் மரத்தேர் பணி நிறைவுற்று, திருத்தேர் வீதிவுலா வரும்.

திருக்கோயில் நிலங்களில் குடியிருந்து வரும் வாடகைதாரர்கள், வணிக பயன்பாட்டிலான கடைகளின் வாடகைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்களிடம் அந்தந்த இடங்களில் இருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றார்போல் வாடகை நிர்ணயித்து வசூலித்து வருகிறார்கள். ஒருபுறம் வாடகை அதிகமாக இருக்கிறது என்று குடியிருப்பு வாடகைதாரர்களும், வணிக ரீதியாக வாடகைக்காரர்களும் மேல்முறையீட்டு மனுக்களை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் வாடகை குறைவாக வசூலிப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டு அபத்தமானது, அறநிலையத்துறை பொறுத்தளவில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தான் சுமார் ரூ. 400 கோடி வாடகை நிலுவைத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. வாடகை நிர்ணயத்தை சீர்படுத்திட தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் அமைத்திருக்கின்றார். இக்குழு வாடகை நிர்ணயம் செய்வது குறித்து முழுமையான சாதக, பாதகங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது. வெகு விரைவில் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும்.

நேற்றைய தினம் சென்னையில் அதிகளவிற்கு மழை பெய்தாலும் எங்கும் பெரிய அளவிற்கு தண்ணீர் தேங்கவில்லை. மழை நின்றவுடன் அடுத்த அரை மணி, ஒரு மணி நேரத்தில் தண்ணீர் முழுவதுமாக வடிந்து விட்டது. 2021ல் இருந்த மழை நீர் தேக்கம் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் குறைந்திருக்கின்றது. வரும் பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அரசால் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகள் முழுமையாக நிறைவு பெற்றவுடன் சென்னையில் மழை நீரால் ஏற்படும் பாதிப்பும் இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சிற்றரசு, சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, மண்டல குழு தலைவர், மதன்மோகன், துணை ஆணையர்கள் ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோயில் நிலங்களுக்கு விரைவில் வாடகை நிர்ணயம்: அமைச்சர் சேகர் பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekar Babu ,Chennai ,Chief Secretary ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...