×

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி

கொலம்போ: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணிக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 259 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் வங்கதேச அணி களமிறங்கியது.

ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டன. திலக் வர்மா அறிமுகமானார். வங்கதேச அணியில் புதுமுக வீரராக டன்ஸிம் சாகிப் சேர்க்கப்பட்டார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஷாகிப் ஹசன் 80 ரன்களும், தவ்ஹித் 54 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், பிரசித், அக்சர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அறிமுக வேகம் டன்ஸிம் சாகிப் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரோகித் டக் அவுட்டானார். அடுத்து வந்த திலக் வர்மா 5 ரன் எடுத்து டன்ஸிம் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, இந்தியா 17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது.

பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டடக்காரர் சுப்மன் கில் 121 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் போராடிய அக்சர் பட்டேல் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி இறுதியில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

The post ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Asian Cup Super 4 Round ,Bangladesh ,Indian team ,Colombo ,India ,Indian ,Super ,round ,Asian Cup ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை