×

சாதாரண மக்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லையா? நாங்கள் தேசத்தின் குரலை கேட்கிறோம்: வக்கீல் குற்றச்சாட்டுக்கு தலைமை நீதிபதி ஆவேசம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் சாதாரண மக்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த தலைமை நீதிபதி நாங்கள் தேசத்தின் குரலை கேட்கிறோம் என்று தெரிவித்தார். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை நீக்கியது குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வக்கீல் மேத்யூஸ் நெடும்பாரா உச்ச நீதிமன்ற செயலாளர் ஜெனரலுக்கு ஒரு இமெயில் அனுப்பியிருந்தார். அதில்,’உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு பிரச்னைகளைத்தான் கவனிக்கிறது. பொதுநலன் அல்லது சாதாரண மக்களின் குரலை கேட்பதில்லை’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

நேற்று இந்த இமெயில் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆவேசமாக வக்கீல் மேத்யூஸ் நெடும்பாராவுக்கு பதில் அளித்தார். தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது,’ மிஸ்டர் நெடும்பாரா, நான் உங்களுடன் பிரச்னை செய்ய விரும்பவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்கு நீங்கள் எழுதிய மின்னஞ்சலில் உச்சநீதிமன்றம் அரசியல் சாசன பெஞ்ச் விஷயங்களைக் கேட்க கூடாது. அரசியல் சாசன அமர்வு இல்லாத விஷயங்களையும் கேட்க வேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளதை உச்சநீதிமன்ற செயலாளர் ஜெனரல் எனக்குத் தெரிவித்தார்’ என்றார்.அப்போது வக்கீல் மேத்யூஸ் நெடும்பாரா தான் உச்ச நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் எழுதியதை ஏற்றுக்கொண்டார்.

ஆனால்,’ அரசியல் சாசனம் அல்லாத அமர்வு என்று நான் கூறியது சாதாரண மக்களின் வழக்குகள்தான்’ என்று குறிப்பிட்டார். அவருக்கு அரசியல் சாசன அமர்வு விவகாரங்களின் முக்கியத்துவத்தை விளக்கிய தலைமை நீதிபதி சந்திரசூட், ‘அரசியல் சாசன விவகாரங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. அதன் முக்கியத்துவத்தை நீங்கள் அறியாமல் இருப்பதால் நான், இதுபற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அரசியல்சாசன அமர்வு இந்தியாவின் சட்ட கட்டமைப்பின் அடித்தளத்தை உருவாக்குகிறது. ஆனால் நீங்கள் 370வது பிரிவைப் பற்றி நினைக்கலாம். அந்த பிரச்னை பொருத்தமானது அல்ல.

அந்த வழக்கில் அரசோ அல்லது மனுதாரர்களோ இதை உணரவில்லை என்று நான் நினைக்கவில்லை. பிரிவு 370 விஷயத்தில், தனிநபர்கள் மற்றும் குறுக்கீடு செய்தவர்களின் குரலையும் நாங்கள் கேட்டோம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கூட எங்களிடம் பேசினார்கள். எனவே, நாங்கள் தேசத்தின் குரலைக் கேட்டு வருகிறோம். எனவே வக்கீல் தனது மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றார். அதற்கு வக்கீல் மேத்யூஸ் கூறுகையில்,’ மக்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணைக்கு நான் எதிரானவன் அல்ல’ என்றார். அத்துடன் விவாதம் முடிவுக்கு வந்தது.

The post சாதாரண மக்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லையா? நாங்கள் தேசத்தின் குரலை கேட்கிறோம்: வக்கீல் குற்றச்சாட்டுக்கு தலைமை நீதிபதி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Supreme Court ,Chief Justice ,
× RELATED உச்ச நீதிமன்ற வழக்கு விவரம் வாட்ஸ்அப்...