×

வீட்டு வேலை எதுவும் செய்யாமல் என் மனைவி எந்நேரமும் அவரது அம்மாவுடன் போனில் பேசுகிறார்: விவாகரத்து கேட்ட கணவருக்கு மும்பை ஐகோர்ட் செம டோஸ்

மும்பை: மும்பையை சேர்ந்த 35 வயது நபர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனுவில், ‘‘என் மனைவி அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு எந்த வீட்டு வேலையும் செய்வதில்லை. எந்நேரமும் அவரது அம்மாவுடன் போனில் பேசியபடி உள்ளார். அவருடன் வாழ்ந்த நாட்கள் கொடுமையாக இருந்தது’’ என கூறியிருந்தார். வழக்கு விசாரணையில் பிரிந்து வாழும் அவரது மனைவி, அலுவலகத்தில் இருந்து திரும்பிய பிறகு அனைத்து வீட்டு வேலையையும் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், தனது குடும்பத்தினருடன் போனில் பேசியதால் பலமுறை உடல் ரீதியாக அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நிதின் சம்ப்ரே, சர்மிளா தேஷ்முக் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில், ‘‘தற்போதைய நவீன சமுதாயத்தில் குடும்ப பொறுப்புகளை கணவன், மனைவி இருவரும் சமமாக சுமக்க வேண்டும். வீட்டு வேலைகளை பெண் மட்டுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிற்போக்கு மனநிலையை பிரதிபலிக்கிறது. ஒருவர் அவரது பெற்றோருடன் பேசுவது, மற்றவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாதது. எங்கள் பார்வையில், பெற்றோருடன் பேச கட்டுப்பாடு விதித்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமை செய்வதுதான் மிகப்பெரிய கொடுமையாக கருதுகிறோம்’’ என்றனர்.

The post வீட்டு வேலை எதுவும் செய்யாமல் என் மனைவி எந்நேரமும் அவரது அம்மாவுடன் போனில் பேசுகிறார்: விவாகரத்து கேட்ட கணவருக்கு மும்பை ஐகோர்ட் செம டோஸ் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Mumbai High Court ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!