×

வேளச்சேரியில் புதிதாக கட்டப்படும் 9 அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் தீ: 8வது மாடியில் சிக்கிய 2 பேர் மீட்பு

வேளச்சேரி, செப்.14: வேளச்சேரி மெயின் சாலை, விஜயநகரில் புதிதாக 9 அடுக்கு மாடி கொண்ட ஓட்டல் கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்கட்டமைப்பு பணிக்கான கார்பென்டர் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் ஓட்டலின் முதல் மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதை கண்டதும் தொழிலாளிகள் பீதியடைந்து கட்டிடத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதன் காரணமாக, அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் வேளச்சேரி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் அப்பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைத்தனர். பின்னர் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். கிண்டி, திருவான்மியூர், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டிடத்தின் முன் பகுதி கண்ணாடி தடுப்புகள் இருந்தால் தண்ணீரை பீய்ச்சி அடிக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் கண்ணாடிகளை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், 8வது மாடியில் டைல்ஸ் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 2 வடமாநில தொழிலாளிகள் சிக்கி இருப்பதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவர்களுடன் செல்போனில் தொடர்பு கொண்டு மொட்டை மாடிக்கு வர செய்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் மொட்டை மாடியில் இருந்து 2 தொழிலாளிகளை பத்திரமாக மீட்டனர்.
இந்த தீ விபத்தால் வேளச்சேரி பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கரும்புகையால் மிகவும் அவதிப்பட்டனர்.

இந்த கட்டிடத்தின் அருகே பெரிய வணிக வளாகம், துணி கடைகள் உள்ளதால் தீ பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உள்கட்டமைப்பு பணிகள் செய்த போது ஏற்பட்ட மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது. முதல் தளத்தில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட மரங்கள் உள்பட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டால் தீ பரவாமல் புகை மண்டலமாக மாறும் ரசாயனம் காரணமாக அதிக அளவில் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.

The post வேளச்சேரியில் புதிதாக கட்டப்படும் 9 அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் தீ: 8வது மாடியில் சிக்கிய 2 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Velachery ,Velachery Main Road, Vijayanagar ,Dinakaran ,
× RELATED சென்னையில் பெரும் பரபரப்பு: பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீ