சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக அதிகாலை 5:05 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், நேற்று தாமதமாக காலை 8:50 மணிக்கு 159 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் விமானம் அந்தமானை நெருங்கிய போது, அந்தமான் தீவில் தரைக்காற்று வீச தொடங்கி மோசமான வானிலை நிலவியது.
அந்தமானில் வழக்கமாக மாலை 4 மணிக்கு மேல்தான் தரைக்காற்று வீச தொடங்கும். அந்த நேரத்தில் அந்தமானில் இருந்து விமானங்கள் புறப்படவோ அல்லது தரை இறங்கவோ அனுமதி கிடையாது. ஆனால் நேற்று தரைக்காற்று முன்னதாக பிற்பகலிலேயே வீச தொடங்கியதால், சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா விமானம், அந்தமானில் தரை இறங்க முடியவில்லை. இதனால் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானியை தொடர்பு கொண்டு, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து ஏர் இந்தியா விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து பிற்பகல் 2:30 மணிக்குஉள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியது. மேலும், விமானம் இன்று(நேற்று) ரத்து செய்யப்படுவதாகவும், நாளை(இன்று) காலை மீண்டும் விமானம் அந்தமான் புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா கவுன்டரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது விமான நிறுவன அதிகாரிகள், உங்கள் பாதுகாப்பு கருதி தான் மோசமான வானிலையில் விமானத்தை தரையிறக்காமல், இங்கு கொண்டு வந்து விட்டோம். நாளை(இன்று) காலை மீண்டும் அதே பயண சீட்டில் அந்தமான் அழைத்து செல்கிறோம் என கூறி சமாதானப்படுத்தினர். இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.
The post மோசமான வானிலை காரணமாக அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது: அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.
