×

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார். அப்போது, அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாத காலமே உள்ள காரணத்தால் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தேசிய அளவில் பாஜவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா என்ற வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் இப்போதிருந்தே தேர்தல் குறித்த பரபரப்பு இந்தியா முழுவதும் தொற்றிக் கொண்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்த தொடங்கிவிட்டது. பாஜ கூட்டணியும், எதிரணியினர் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இதனால், கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடுகள் குறித்தும் அனைத்து கட்சிகளிலும் ஆலோசனைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது தேசிய அளவில் பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா என்ற கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளன. இவைகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. இந்த சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறர், அங்கு, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார். அவர்களுடனான இந்திய சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிமுக- பாஜ கூட்டணி குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து பாஜ தலைமை எடப்பாடி பழனிசாமியை அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நாடாளுமன்ற தேர்தல் என்பதால் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதால், அது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷாவும், ஜெ.பி.நட்டாவும் வலியுறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்று அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும் தொகுதி பங்கீட்டை இரு கட்சிகளும் இறுதி செய்வதற்காக அமித்ஷா தான் டெல்லிக்கு அழைத்துள்ளதாகவும், இதனால் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதனால் டெல்லி தலைமையோடு எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Delhi ,Amit Shah ,Natta ,Chennai ,AIADMK ,general secretary ,Dinakaran ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’