*சம்பா சாகுபடி பணிகள் துவங்குவதில் காலதாமதம்
வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளும் வகையில் சுமார் 40 சதவீதம் அளவிற்கே விதை விடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு போதிய தண்ணீர் வராத நிலையில், வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டு முன்கூட்டியே மூடப்பட்டது.
அக் காலகட்டங்களில் வடகிழக்கு பருவமழையை நம்பி சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உரிய நேரத்தில் சம்பா சாகுபடி பணிகளை துவங்க இயலாமல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரே சாகுபடி பணிகள் துவங்கியது. மேலும் அப்போது மூன்று போக சாகுபடி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு போக சம்பா சாகுபடியை மிகுந்த போராட்டத்துக்கு இடையே விவசாயிகள் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் முன்கூட்டியே மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. அப்போது சம்பா சாகுபடி பணிகள் உரிய நேரத்தில் துவங்கப்பட்டது.இந்தாண்டு இதேபோல மேட்டூர் அணை நீர்மட்டம் போதிய அளவு இருந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்பட்டது.
இருப்பினும் எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. அதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடு என குறைந்தது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராத நிலையில் தமிழக அரசு நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .
வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு 10 ஆயிரம் எக்டேர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கை நடவு இயந்திரம் நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இதில் நேரடி விதைப்பு மூலம் சுமார் 4000 எக்டேர் நிலப்பரப்பும், இயந்திர நடவு மூலம் சுமார் 2500 எக்டேர் நிலப்பரப்பும் வழக்கமான விதை விட்டு கை நடவு மூலம் சுமார் 3500 எக்டேர் நிலப்பரப்பும் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் பாசனத்திற்கு போதிய தண்ணீர் வராத நிலையில், நீண்டகால ரக விதைநிலங்களை பயன்படுத்த விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை. தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
The post வலங்கைமான் தாலுகாவில் 40 சதவீதம் மட்டும் விதை விடும் பணி appeared first on Dinakaran.
