×

நண்பர் மனைவியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் திடீர் தற்கொலை

அருமனை, செப். 13: அருமனை நெடுவிளை அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் ஜெனீஷ் குமார்(38). மரங்களை வெட்டி வியாபாரம் செய்து வந்தார். அவரும், அவரது நண்பர் ஒருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. நண்பருக்கு திருமணமாகி 12 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நண்பன் இறந்ததால் அவரது மனைவி, குழந்தைகளுக்கு, ஜெனீஷ் குமார் ஆதரவாக இருந்து வந்தார். இதையடுத்து அந்த பெண்ணும், ஜெனீஷ்குமாரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் டூ கெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் மது அருந்திவிட்டு ஜெனீஷ் குமார் வீட்டுக்கு வந்தார். பின்னர் திடீரனெ தகராறு செய்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த பெண் தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அந்த பெண்ணின் 6 வயது மகன் வீட்டின் பின் பக்கம் வழியாக சென்று பார்த்துள்ளான். அப்போது வீட்டுக்குள் ஜெனீஷ் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு கூச்சலிட்டான். இதையடுத்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில், குடும்ப தகராறு காரணமாக ஜெனீஷ் குமார் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நண்பர் மனைவியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் திடீர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Palace ,Janeesh Kumar ,Arumanai Neduvlai Andugodu ,Dinakaran ,
× RELATED ஓடிடியில் வருகிறது மெகாஹிட் ‘அரண்மனை 4’ திரைப்படம்!